உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -3

இவனை ளமையில் வளர்த்தவர்கள் முதல் கண்ட ராதித்தசோழன் மனைவியாகிய செம்பியன் மாதேவியும் இவன் தமக்கையாகிய குந்தவைப் பிராட்டியுமாவர். அவர்கள் சிவபக்தி, சமயப்பொறை முதலான உயர் குணங்கள் பலவும் ஒருங்கே அமையப்பெற்றவர்கள். அத்தகையாரது அன்பு கலந்த அறிவுரைகளை நாள்தோறும் கேட்டு ஒழுகி வந்தமையே இவன் சைவசமய வளர்ச்சியிலும் சிற்பம், ஓவியம், முதலான கலை வளர்ச்சியிலும் பெரிதும் ஈடுபட்டுச் சமயப்பொறை யுடையவனாய் வாழ்ந்துவந்தமைக்குக் காரண மாகும்.

சை

முற்காலத்தில் பாண்டியரும் பல்லவரும் பிறர்க்கு இறையிலியாக நிலங்கள் வழங்குங்கால் அவ்வறச் செயல்களைச் செப்பேடுகளில் எழுதுவித்து உரியவர்க்கு அளிப்பது வழிவழி வந்த வழக்கமாகும். அவர்கள் அங்ஙனம் செய்யும்போது அச் செப்பேடுகளில் தம்முன்னோர் வரலாற்றை முதலில் எழுது வித்து, பின்பு தாம் புரிந்த அறச்செயல்களைக் குறிப்பிட்டு வந்தனர் என்பதை அன்னோர் ஆட்சிக் காலங்களில் வெளியிடப் பெற்ற செப்பேடுகளால் நன்கறியலாம். இராசராச சோழனுடைய தந்தையாகிய இரண்டாம் பராந்தக சோழனும் அம்முறையைப் பின் பற்றிய செய்தி அவனது அன்பிற் செப்பேடுகளால் அறியக் கிடக்கின்றது.

தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்றுண்மைகளை நன்கு விளக்கும் மெய்க்கீர்த்தியை இனிய தமிழ்மொழியில் அகவற் பாவில் அமைத்துத் தன் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை முதலில் மேற்கொண்ட பெருவேந்தன் நம் இராசராச சோழனேயாவன். இவனுக்குப் பிறகு இவன் வழியில் வந்த சோழர்களும் பிறமன்னர்களும் அச்செயலைப் போற்றித் தாமும் மேற்கொள்வாராயினர். எனவே, அரசர்கள் தம் மெய்க்கீர்த்திகளைக் கல்வெட்டுக்களில் எழுதும் வழக்கம் முதலில் இராசராச சோழன் காலத்தில்தான் உண்டாயிற்று என்பதும் அதற்கு முன்னர் அஃது இல்லை என்பதும் அறியற் பாலனவாகும்.