உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

89

மெய்க்கீர்த்திகள்' கூறுவனவெல்லாம் வெறுங் கற்பனைச் செய்திகளல்ல. அவை, அவ்வேந்தர்களின் ஆட்சிக் காலங்களில் நிகழ்ந்த உண்மைச் செய்திகளையே உணர்த்துகின்றன. சில அரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க்கீர்த்திகளையுடைய வராகவும் இருப்பதுண்டு. ஒவ்வொரு வேந்தனுடைய மெய்க் கீர்த்தியும் வெவ்வேறு மங்கல மொழியால் தொடங்கப் பெற்றிருத்தலால் அம்மெய்க் கீர்த்தியின் தொடக்கத்திலுள்ள தொடர்மொழிகளாகிய அவற்றைக் கண்ட அளவிலேயே அக்கல்வெட்டு எவ்வேந்தனுடைய ஆட்சிக் காலத்தில் வரையப் பட்டது என்பதை ஐயமின்றிக் கூறிவிடலாம். முதல் இராசராச சோழனது மெய்க்கீர்த்தி 'திருமகள் போலப் பெரு நிலச் செல்வியும்' என்று தொடங்குகிறது. அம்மெய்க்கீர்த்தியில் கூறப்பட்டுள்ள இவ்வேந்தனது வீரச் செயல்களெல்லாம் ஆண்டு தோறும் அவை நிகழ்ந்த முறையில் நிரல்பட வைத்துச் சொல்லப் பட்டிருக்கின்றன. எனவே, ஆட்சியாண்டுகள் ஏற ஏற மெய்க் கீர்த்தியும் வளர்ந்துகொண்டே போகும் என்பது ஒருதலை. ஏனைய மன்னர் மெய்க்கீர்த்தியும் அத்தகையவே.

இனி, இராசராச சோழனது மெய்க்கீர்த்தியின் துணை கொண்டு இவனது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற போர் நிகழ்ச்சி களையும் வனது வெற்றிச் சிறப்பையும் ஆராய்ந்து காண்பது அமைவுடையதேயாம். 'திருமகள் போல' என்று தொடங்கும் இவன் மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியின் எட்டாம் ஆண்டாகிய கி. பி. 993 முதல்தான் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இவன் தன் ஆட்சியின் நான்காம் ஆண்டின் தொடக்கத்திலேயே 'காந்தளூர்ச் சாலைக்கல மறுத்தருளிய கோ இராசகேசரி வர்மன்' என்று தன்னைக் கூறிக் கொள்வதோடு தன் மெய்க்கீர்த்தியிலும் அச்செயலையே முதலில் குறிப்பிட்டுள்ளனன். ஆகவே, இவன் கி. பி. 988-ஆம் ஆண்டில் காந்தளூர்ச் சாலையில் போர் நிகழ்த்தி வெற்றி பெற்றிருத்தல் வேண்டுமென்பது திண்ணம். இவன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முதற் போர் அதுவேயாகும்.

1. மெய்க்கீர்த்தியின் இலக்கணங்களைப் பன்னிரு பாட்டியலிலுள்ள சூத்திரங்களாலும் வச்சணந்திமாலை வெண்பாப் பாட்டியலாலும் நன்குணரலாம்.

2. Ins. 261 of 1910.

3. Ins. 395 of 1922.