உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




118

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

மணந்து வாழ்ந்தவள் என்பது முன் கூறப்பட்டுள்ளது. இவன் தான் எடுப்பித்த தஞ்சைப் பெரிய கோயிலுக்குத் தானும் தன் தமக்கையும் கொடுத்தவற்றை நடு விமானத்தில் கல்லில் வரையும்படி முதலில் குறிப்பிட்டிருப்ப தொன்றே' இவன் தன் தமக்கையிடத்தில் வைத்திருந்த பேரன்பையும் பெரு

மதிப்பையும் நன்குணர்த்துவதாகும்.

இவன்தன் பாட்டனாகிய அரிஞ்சயனையும் பெரிய பாட்டியாகிய செம்பியன் மாதேவியையும் நினைவு கூர்தற்கு அறிகுறியாக முறையே வட ஆற்காடு ஜில்லாவில் மேற்பாடி என்னும் ஊரில் அரிஞ்சயேச்சுரம் என்ற கோயிலும்' திருமுக் கூடலில் 'செம்பியன் மாதேவிப் பெருமண்டபம்' என்ற மண்டபமும் கட்டுவித்திருப்பது இவன் தன் முன்னோர் களிடத்தில் எத்துணை அன்பும் மரியாதையும் வைத்திருந்தான் என்பதை இனிது புலப்படுத்தாநிற்கும். இராசராசன் திருமுக் கூடலில் எடுப்பித்த அப் பெருமண்டபம் ஊர்ச்சபையார் கூடித் தம் கடமைகளை நிறைவேற்றுவதற்குப் பயன்பட்டது என்பது அறியத்தக்கது.

இனி, இராசராச சோழன் ஆட்சிக்காலத்தில் ஆண்டு தோறும் இவனுக்குத் திறை செலுத்திக்கொண்டு வாழ்ந்து வந்த குறுநில மன்னர் சிலர் இருந்தனர். அன்னோருள் முதல்வனாகக் கருதத் தக்கவன் திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையந் தாலூகா விலுள்ள பழுவூரில் பழுவேட்டரையர் என்னும் பட்டத்துடன் வாழ்ந்த குறுநில மன்னன் ஆவன். பழுவேட்டரையர் என்ற பட்டமுடையோர் சேரர் மரபினருள் ஒரு கிளையின ரேயாவர். அவர்கள் சோழர்கட்கு நெருங்கிய உறவினராக இருந்தனர். முதற் பராந்தக சோழன் பழுவேட்டரையன் மகளை மணந்து கொண்டான் என்பதும் அவ்விருவர்க்கும் பிறந்த புதல்வனே இராசராச சோழன் பாட்டனாகிய அரிஞ்சயன்

1. 'நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜேஸ்வர முடையாருக்கு நாம் குடுத்தனவும் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும், மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீ விமானத்தில் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிஞ்சருள வெட்டின' (S. I. I., Vol. II, page 2.)

2. S. I. I., Vol. III. No. 15.

3. Ins. 178 of 1915.