உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




142

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

பிறகு, அப்படைத்தலைவன் ஆதிநகரில் இந்திரரதன் என்பவனை வென்று ஒட்டர தேயத்தையும் கோசல நாட்டையும் பிடித்துக் கொண்டனன். அக் கோசலம், மகாகோசலம் என்று வழங்கும் தென்கோசல நாடாகும். தாரா நகரத்திலிருந்த போச ராஜனுக்கு* இந்திரரதன் என்னும் பகைவேந்தன் ஒருவன் இருந்தனன் என்பது உதயபுரக் கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது. அவ்விந்திரரதனே ஆதிநகரில் நிகழ்ந்த போரில் தோல்வியுற்று ஒட்டர தேயத்தையும் தென்கோசல நாட்டையும் இழந்தவனாதல் வேண்டும் என்று டாக்டர் கெல்ஹார்ன் கருதுவது மிகப் பொருத்தமுடையதேயாம்.

அதன் பின்னர், தன்மபாலனுடைய தண்டபுத்தியும் ரண சூரனது தக்கணலாடமும் கோவிந்தசந்தனுக்குரிய வங்காள தேசமும் மகிபாலனது உத்திரலாடமும் இராசேந்திரன் படைத்தலைவனால் கைப்பற்றப்பட்டன. அவ்வேந்தர்களை வென்று அவர்களுடைய நாடுகளைப் பிடித்த பிறகு அப்படைத் தலைவன் கங்கைக்கரையை அடைந்தான் என்று மெய்க்கீர்த்தி கூறுகின்றது.

அந்நாடுகளுள், தண்டபுத்தி என்பது வங்காள நாட்டில் மிதுனபுரி ஜில்லாவின் தென்பகுதியும் தென் மேற்குப் பகுதியும் அடங்கிய நிலப்பரப்பாகும்". எனவே, அது சொர்ணரேகை யாற்றின் இரு கரையிலும் பரவியிருந்த நாடெனலாம். ஆகவே, அஃது ஒட்டரதேயத்திற்கும் வங்காளத்திற்கும் இடையில் அமைந்திருந்த ஒரு நாடு என்பது திண்ணம்". வங்காளத் திலுள்ள பர்த்துவான் என்னும் நிலப்பரப்பு முற்காலத்தில் வர்த்தமான புத்தி என்ற பெயருடைதாயிருந்தது என்றும்

1. சில கல்வெட்டுக்களில் நம் இராசேந்திரன் ‘பூர்வ தேசமுங் கங்கையுங் கடாரமுங்கொண்ட கோப்பரகேசரி வர்மன்' என்று கூறப்படுகின்றான். இதில் குறிப்பிடப் பெற்ற பூர்வதேசம் என்பது மத்தியப் பிரதேசத்திலுள்ள சட்டிஸ்கார் (Chattisgarh) பகுதியாம். (Ep. Ind. Vol. IX, p.283) அது பூர்வ ராஷ்டிரம் என்றும் முற்காலத்தில் வழங்கப் பெற்று வந்ததாம். அப் பூர்வதேசம் தென் கோசலத்தைச் சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். 2. வடமொழிப் புலவர்களை ஆதரித்த போசன் இவனே யாவன்.

3. Ep. Ind., Vol. VII, p. 120

4. Ep. Ind., Vol. XXII, pp. 153 and 154.

5. Palas of Bengal, p. 71.