உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




192

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

இவன் தமையனாகிய இராசாதிராசன் இராசகேசரி என்னும் பட்டத்துடன் அரசாண்டவனாதலின் அவனுக்குப் பிறகு முடிசூடிய இவ்வேந்தன் பரகேசரி என்னும் பட்டம் புனைந்து கொண்டு ஆட்சி புரிவானாயினன்.

இவ்வரசன் கல்வெட்டுக்களில் இவனுக்குரியனவாக மூன்று மெய்க்கீர்த்திகள் காணப்படுகின்றன. அவற்றுள் 'இரட்டபாடி ஏழரை இலக்கமுங்கொண்டு கொல்லாபுரத்து ஜயஸ்தம்பம் நாட்டிப் பேராற்றங்கரைக் கொப்பத்து ஆகவமல்லனை அஞ்சுவித்து அவன் ஆனையும் குதிரையும் பெண்டிர் பண்டாரமும் கைக்கொண்டு விஜயாபிஷேகம் பண்ணி வீர சிங்காசனத்து வீற்றிருந்தருளின கோப்பர கேசரி வர்மரான உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழ தேவர்` என்பது இவன் வீரச் செயல்கள் எல்லாவற்றையும் சுருக்கிக் கூறும் ஒரு சிறிய மெய்க்கீர்த்தியாகும். இஃது இவனது ஆட்சியின் இரண்டாம் ஆண்டு முதல் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது. இரண்டாம் மெய்க்கீர்த்தி "திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்' என்று தொடங்குகிறது. அது முதல் மெய்க்கீர்த்தியின் பிறிதொரு வடிவமேயாம். சிற்சில கல்வெட்டுக்களில் அம்மெய்க்கீர்த்தி யிலுள்ள தொடர்கள் முன் பின்னாக மாறியும் சில மொழிகள் வேறுபட்டும் காணப் படுகின்றன. இவனது மூன்றாம் மெய்க் கீர்த்தி, 'திருமாது புவியெனும் பெருமாதர்' என்று தொடங்கி நீண்டு செல்லுகின்றது. அது பெரிய மெய்க்கீர்த்தியாதலின் பல செய்திகளைத் தன்னகத்துக் கொண்டுள்ளது. ஆகவே, இவ்வேந்தன் வரலாற்றை ஆராய்வதற்கு அது பெரிதும் பயன்படுவதாகும். அஃது இவனது ஆட்சியின் நான்காம் ஆண்டு முதல் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது. அதில் இராசேந்திரன் நிகழ்த்திய முதல் மேலைச் சளுக்கியப் போர், ஈழநாட்டுப்போர் இரண்டாம் மேலைச்சளுக்கியப் போர் ஆகிய மூன்றும் சொல்லப்பட்டிருக்கின்றன. இவன், கி. பி. 1054-ல் ஆகவமல்லனுடன் கொப்பத்தில் நடத்திய பெரும்போரே முதல் மேலைச் சளுக்கியப் போராகும். இவன், தன் தமையன்

1 S. I. I., Vol. VII, No. 798; Ep. Car., Vol. X. KL. 107.

2.S.I. I., Vol. III, No. 29.

2