உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




191

13. இரண்டாம் இராசேந்திர சோழன்

கி. பி. 1051-1063

இம்மன்னன், கங்கைகொண்ட சோழன் என்று வழங்கும் முதல் இராசேந்திர சோழனுடைய இரண்டாம் புதல்வன். இவன், தன் தமையன் இராசாதிராசன் கொப்பத்துப்போரில் கி.பி.1054-ல் இறந்தவுடன் அப்போர்க்களத்திலே சோழ இராச்சியத்திற்குச் சக்கர வர்த்தியாக முடிசூடிக்கொண்டான் என்பது இவன் கல்வெட்டால் அறியப்படுகின்றது.1 ஆனால், இவன் கி.பி. 1051-ஆம் ஆண்டில் முடி சூட்டப்பட்டிருத்தல் வேண்டும் என்பது மைசூர் இராச்சியத்திலுள்ள ஒரு கல்வெட்டால் வெளியாகின்றது.2 ஆகவே, இராசாதிராசன் கி. பி. 1051-ல் இவனுக்கு இளவரசுப்பட்டங்கட்டித் தனக்குத் துணையாய் அமர்ந்து அரசியற் கருமங்களைப் பார்க்குமாறு ஏற்பாடு செய்திருந்தனன் என்பது தெள்ளிது. அதற்கேற்ப, இராசாதி ராசன் மேலைச்சளுக்கியரோடு பல ஆண்டுகள் நடத்திவந்த பெரும் போர்களில் நம் இராசேந்திரன் அவனுக்குப் பல்வகை யானும் உதவி புரிந்து வந்தமை கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. தென்னார்க்காடு ஜில்லா மரக்காணத்தில் கி. பி. 1053 -ல் வரையப் பெற்ற கல்வெட்டொன்று, அவ்வூர் தம்பித் துணைச் சோழவள நாட்டின்கண் உள்ளது என்று உணர்த்து கின்றது.3 தொண்டைமண்டலத்தில் ஒரு வள நாட்டுக்குத் தம்பித் துணைச் சோழவள நாடு என்று இராசாதிராசன் தன் ஆட்சிக்காலத்தில் பெயர் வைத்திருத்தலை நோக்கு மிடத்து, அவன் தன் தம்பி இராசேந்திரன் தனக்குச் செய்துவந்த உதவி களை எத்துணை மதிப்புடன் பாராட்டியுள்ளனன் என்பது நன்கு புலனாகும்.

1. S. I. I., Vol. V, No.647.

2. Ep. Ind., Vol, IV, pp.213-219; Ep. car., Vol. IV, Hg. 18.

3. Ins. 30 of 1919.