உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




194

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

இனி, இவன் ஆட்சிக்காலத்தில் அடுத்து நிகழ்ந்தது ஈழநாட்டுப் போராகும். அது கி. பி. 1054-ன் இறுதியிலாதல் 1055-ம் ஆண்டின் தொடக்கத்திலாதல் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது.' ஈழநாட்டின் பெரும்பகுதி சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பது முன்னர் விளக்கப்பட்டிருக்கின்றது. அதன் தென்கீழ்ப் பகுதியாகிய ரோகண நாட்டில் பழைய சிங்கள மன்னரின் வழியினர் தங்கியிருந்து கொண்டு, ஈழம் முழுவதையும் தம் ஆட்சிக்கு உட்படுத்துவதற்குக் காலம் கருதிக் கொண்டிருந்தனர். எனவே, சில சமயங்களில் அன்னோர் அந்நாட்டில் அமைதி யின்மையையும் கலகத்தையும் உண்டுபண்ணியிருத்தல் கூடும். அத்தகைய சமயம் ஒன்றில்தான் நம் இராசேந்திரன் பெரும் படையொன்றைத் தக்க தலைவன் ஒருவன்கீழ் ஈழ நாட்டிற்கு அனுப்பிப் போர் நிகழ்த்தியிருத்தல் வேண்டும் என்பது ஒரு தலை. அங்கு நடைபெற்ற போரில் வீரசலாமேகன் என்பவன் கொல்லப்பட்டான்; இலங்கையர்க் கிறைவனாகிய மானா பரணன் புதல்வர் இருவர் போர்க்களத்தில் சிறை பிடிக்கப் பட்டனர். போர்க்களத்தில் கொல்லப்பட்ட வீரசலாமேகன் கலிங்க மன்னன் என்று இவ்விராசேந்திரன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது.* இராசாதிராசன் ஆட்சியில் நடைபெற்ற ஈழநாட்டுப் போரில் கொல்லப்பட்ட வீரசலா மேகன் என்பான் கன்னியா குப்ஜத்தரசன் என்று அவன் மெய்க்கீர்த்தி உணர்த்துகின்றது. எனவே, ஒரே பெயர்கொண்ட அவ்விருவரும் வெவ்வேறு நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்று அதனை ஆட்சிபுரிந்து, இரு வேறு சோழ மன்னர் ஆட்சிக் காலங்களில் போரில் கொல்லப்பட்டவர் என்பது அறியத்தக்கது. சிறை பிடிக்கப் பெற்ற மானாபரணன் புதல்வரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. நம் இராசேந்திரன் கல்வெட்டு ஈழநாட்டில் காணப்படுவதால் அந்நாடு இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பது திண்ணம்'.

1. S. I. I., Vol. V. Nos. 489 and 512.

2. S. I. I., Vol. V, No. 644.

3. Ibid, No. 978.

4. Ibid, Vol. IV, Nos. 1408 and 1415.