உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

195

இராசேந்திரன் ஆட்சியில் நிகழ்ந்த இரண்டாம் மேலைச் சளுக்கியப் போர் கி.பி. 1059-ம் ஆண்டில் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது திருமழபாடியிலுள்ள இவனது ஒன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டால் அறியப்படுகின்றது.' மேலைச் சளுக்கிய மன்னனாகிய ஆகவமல்லன்தான் கொப்பத்துப் போரில் அடைந்த அவமானத்தை நினைத்து வருந்தி அதனை ஒருவாறு போக்கிக் கொள்ளும் நிமித்தம் பெரும் படையுடன் புறப்பட்டுப் பேராறாகிய கிருஷ்ணையின் கரையில் மீண்டுஞ் சோழரைச் சந்தித்து கடும் போர் புரிந்தான். முடக்காற்றுப் போர் என்று இராசேந்திரன் கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றிருப்பது இப்போரேயாம்.' இதிலும் மேலைச்சளுக்கியர் பல்வகைத் துன்பங்களுக்கு உள்ளாயினர். சளுக்கிய தண்ட நாயகனாகிய வாலாதேவனும் மற்றும் பல தலைவர்களும் கொல்லப்பட்டனர்; ஆகவமல்லனும் அவன் மகன் விக்கிரமாதித்தனும் இருகையன் முதலானோரும் எதிர்த்துப் போர்புரியும் ஆற்றலின்றிப் புறங்காட்டி ஓடிவிட்டனர். எனவே, தம் மானத்தைக் காக்கும் பொருட்டுச் சோழரோடு போர்புரிய வந்த மேலைச்சளுக்கியர் முடக்காற்றுப் போரிலும் முழுத் தோல்வி எய்தித் தம் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு ஓடியமை குறிப்பிடத்தக்கது.

இனி, முடக்காற்றுப் போரில் கலந்து கொண்டு போர் புரிந்த சோழ மன்னர்கள் யாவர் என்பதும் ஈண்டு ஆராயற் பாலதாம். அப்போர் நிகழ்ந்தபோது சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக இருந்தவன் நம் இராசேந்திரசோழனே என்பது இவன் கல்வெட்டுக்களில் அந்நிகழ்ச்சி குறிக்கப்பட்டிருத்தலால் நன்கறியக் கிடக்கின்றது. திருப்பாதிரிப்புலியூரிலுள்ள கல்வெட் டொன்று, 'அடற்களிற்றால் ஆகவமல்லனை - முடக்காற்றில் முதுகிடுவித்து - மற்றவன் சயசிங்கனொடும் - வருதண்டினைப் பொருதண்டினால் - வெற்றி கொண்டு வெண்குடை நீழல் வீரசிங்காசனத்து வீற்றிருந்தருளின கோவிராஜ கேசரிவர்மரான உடையார் ஸ்ரீ இராசமகேந்திர தேவர்' என்று கூறுகின்றது.3

1.

-

எட்டாம் ஆண்டுக் கல்வெட்டில் அப்போர் நிகழ்ச்சி காணப்படவில்லை. (S. I. I., Vol. V, No. 644)

2.S.I. I., Vol. V, No. 647.

3. S. I. I., Vol. VII, No, 743.