உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

31

இவ்வேந்தர் பெருமானுக்குப் பராந்தகன், கன்னரதேவன்' என்ற இரு புதல்வர் உண்டு. அவர்களுள் பராந்தகனே இவனுக்குப் பிறகு பட்டம் பெற்றவன். ஆதித்தனுடைய இரு மனைவியருள் அப்பராந்தகன் யாருடைய புதல்வன் என்பது புலப்படவில்லை, கிருஷ்ண தேவன் என்பது கன்னடமொழியில் கன்னரதேவன் என்று வழங்கும். எனவே, கி. பி. 880 முதல் கி. பி. 915 வரையில் குந்தள நாட்டில் அரசாண்ட இராஷ்டிரகூட மன்னனாகிய இரண்டாம் கிருஷ்ணதேவன் மகளும் ஆதித்தனுடைய பட்டத் தரசியுமாகிய இளங்கோப்பிச்சியின் மகனே அக்கன்னர தேவன் என்பது நன்கு துணியப்படும்'. ஆகவே, அவனுக்குத் தாய்ப் பாட்டன் பெயர் இடப்பட்டிருத்தல் அறியத்தக்கது. ஆதித்தனுக்குப் பிறகு பட்டத்தரசியின் புதல்வனாகிய கன்னர தேவன் பட்டம் பெறாமைக்குக் காரணம் தெரியவில்லை. ஒருகால், அவன் தன் தந்தையின் ஆட்சிக்காலத்திலேயே இறந்திருத்தல் வேண்டும்; அவ்வாறு இறந்திலனாயின் பராந் தகனுக்குத் தம்பியா யிருந்திருத்தல் வேண்டும். அதுபற்றியே, ஆதித்தன் வயதில் மூத்தவனும் பேராற்றல் படைத்தவனுமாகிய பராந்தகனுக்குச் சோணாட்டு ஆட்சியை அளித்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். கன்னர தேவனுக்குப் பூதிமாதேவ அடிகள் என்ற மனைவி யொருத்தி இருந்தனள் என்பது அந்துவநல்லூரிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது'. அவள் கொடும்பாளூரிலிருந்த குறுநில மன்னன் ஒருவனுடைய மகள் ஆவள்.

சித்தூர் ஜில்லாவில் திருக்காளத்திக்கு அண்மையிலுள்ள தொண்டைமான் பேராற்றூரில் கி.பி. 907 ஆம் ஆண்டில் ஆதித்தன் இறந்தனன் என்று தெரிகிறது. அவ்வூர் இக்காலத்தில் தொண்டைமானாடு என்று வழங்கப்படுகிறது. அங்கு, இவன் புதல்வனாகிய முதற்பராந்தக சோழன் தன் தந்தையை நினைவு

1. S. I. I., Vol. V. No. 595. சோழ பெருமானடிகள் மகனார் ஆதித்தன் கன்னரதேவன் 2. Ep. Ind., Vol. XXVI, pp. 233 and 234.

3.S.I.I., Vol. VIII. No. 665.

4.S. I. I., Vol. III. No. 142. தொண்டைமானாற்றூர்த் துஞ்சிய உடையார்க்கு யாண்டு இருபத்தொன்றாவது.