உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

(9) அனந்த பாலன்

85

இவன் விக்கிரம சோழன் காலத்திலிருந்த தலைவர்களுள் ஒருவன்; அனந்தபாலன் என்னும் பட்டம் பெற்றவன். இவன் கி. பி. 1121-ல் திருவாவடுதுறையில் சங்கர தேவன் அறச்சாலை, அனந்தபாலர்ப் பெருந்திருவாட்டி என்ற அறச்சாலைகள் அமைத்து, தவசியர்க்கும் அந்தணர்க்கும் அனாதைகட்கும் உணவளித்தற் பொருட்டு நிலம் வழங்கியுள்ளனன் என்று அவ்வூரிலுள்ள கல்வெட்டுக்கள்' கூறுகின்றன. மருத்துவம் இலக்கணம் முதலியவற்றைக் கற்போர்க்கும் அதில் இலவசமாக உணவளிக்குமாறு இவன் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத் தக்கது.* இவனது அறச்செயல் விக்கிரம சோழனுலாவில்’ ஒட்டக்கூத்தரால் நன்கு பாராட்டப் பெற்றுள்ளது. இவன், சோழ மண்டலத்தில் பேராவூர் நாட்டிலுள்ள இளங்காரிக் குடியிற் பிறந்தவ னென்பதும் சங்கரன் என்பவனுடைய புதல்வன் என்பதும் அம்பலங் கோயில் கொண்டான் என்னும் பெயருடையவன் என்பதும் கங்கைகொண்ட சோழபுரத்தி லிருந்த சேனாபதிகளுள் ஒருவன்" என்பதும் திருவாவடுதுரைக் கல்வெட்டுக்களால் வெளியாகின்றன.

(10) வத்தவன்

இவன், முதற் குலோத்துங்க சோழன் விக்கிரம சோழன் ஆகிய இருவர் ஆட்சிக்காலங்களிலும் நிலவிய ஒரு படைத் தலைவன். இவனைப் பற்றிய செய்திகள் முன் அதிகாரத்தில் எழுதப் பெற்றுள்ளமையின் அவற்றை விரிவாக அங்கே காணலாம்.

1. Ins. Nos. 158 of 1925. and 71 of 1926.

2. Ins. No. 159 of 1925.

3.

–‘தலைத்தருமம்’

வாரிக் குமரி முதல் மந்தா கினியளவும்

பாரித் தவனனந்த பாலனும்

(விக். உலா. வரிகள் 162-164)

கன்னியாகுமரி முதல் கங்கை வரையில் அறச் சாலைகள் நிறுவி அன்னதானஞ் செய்த பெருந் திருவாளன் இத்தலைவன் என்பது இவ்வடிகளாற் பெறப்படுதல் காண்க. கங்கைகொண்ட சோழன் திருக்கொற்றவாசலில் புறவாயில் சேனாபதி இளங்காரிக் குடையான் சங்கரன் அம்பலங்கோயில் கொண்டானாகிய அனந்தபாலர் - Ins. 71 of 1926.