உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

இராசாதிசாசன் சிறப்புப் பெயர்

தஞ்சாவூர் ஜில்லா மாயூரந் தாலூகாவிலுள்ள ஆற்றூரில் காணப்படும் கல்வெட்டொன்றால் இவ்வேந்தனுக்குக் கரிகால சோழன் என்னும் சிறப்புப் பெயரும் அந்நாளில் வழங்கியது என்று தெரிகிறது. அன்றியும், சிதம்பரத்திலுள்ள இவன் கல்வெட் டொன்று’ ‘இராசாதிராச தேவராகிய கரிகால சோழ தேவர்’ என்று கூறுவதால் இச்செய்தி உறுதியாகின்றது.

இவன் மனைவி மக்கள்

'பூமருவிய திசை முகத்தோன்' என்று தொடங்கும் இவனது ஐந்தாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டில் இவன் பட்டத்தரசி, புவனமுழுதுடையாள் என்று குறிக்கப் பெற்றுள்ளனள். அவ்வாட்சி யாண்டிலேயே வரையப்பெற்ற ‘கடல் சூழ்ந்த பார் மாதரும்' என்று தொடங்கும் மற்றொரு கல்வெட்டு பட்டத்தரசியின் பெயர் உலகுடை முக்கோக் கிழானடிகள் என்று உணர்த்துகின்றது. ஒரே ஆட்சி யாண்டில் பட்டத்தரசியின் பெயராக இவ்விரு பெயரும் காணப்படுவதால், இவ் வேந்தனுடைய பட்டத்தரசி புவனமுழுதுடையாள் எனவும் உலகுடை முக்கோக்கிழானடிகள் எனவும் அந்நாளில் வழங்கப்பெற்றிருத்தல் வேண்டு மென்பது நன்கு துணியப்படும். இவர்கள் வெவ்வேறு அரசியராயிருந் திருப்பின் இவர்கள் இருவரும் ஒரே யாண்டில் பட்டத்தரசி என்று கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றிருக்கமாட்டார்கள் என்பது திண்ணம். இவ் வேந்தனுக்குப் பிறகு முடி சூட்டப் பெற்றவன் மூன்றாங் குலோத்துங்க சோழன் ஆவான். எனவே, இராசாதிராசனுக்கு மக்கள் உண்டா இல்லையா என்பது தெரியவில்லை.

வனது ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியத்தின் நிலை

இவன் ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியத்தின் பெருமையும் பரப்பும் சிறிது குறைந்து போயின எனலாம். எனினும், இவன்

1. Ins. 129 of 1927.

2. Ins. 263 of 1913.

3. S.I.I., Vol. VII, No. 890.

4. Ibid, Vol. VI, No. 456.