உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

கூறுகின்றது. அச்செய்தியும் உலாவில் சொல்லப்படவில்லை. ஆகவே, சங்கர சோழன் உலாவில் கூறப் பெற்ற சங்கமம், குமார மகீதரன் என்போர் சோழ நாட்டை ஆட்சி புரிந்த மன்னர் அல்லர் என்பது தேற்றம்.

இனி, இரண்டாம் இராசராச சோழன் இறந்தபோது அவனுக்கு ஒரு வயதும் இரண்டு வயதுமுள்ள இரண்டு பிள்ளை களிருந்தனர் என்றும் அன்னாருள் ஒருவனுக்காதல் முடி சூட்டு வதற்குரிய வயதின்மையால் கங்கைகொண்ட சோழபுரத்தி லிருந்த நெறியுடைப் பெருமாள் புதல்வன் எதிரிலிப் பெருமாளை அழைத்து வந்து அவனுக்கு இளவரசப் பட்டங்கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டதென்றும் பல்லவ ராயன் பேட்டையிலுள்ள கல்வெட்டொன்று கூறுகின்றது. அதனை நுணுகியாராயு மிடத்து, அதில் குறிப்பிடப்பெற்ற இரண்டு வயதுப் பிள்ளையே கி. பி. 1178-ல் பட்டம் பெற்ற இக் குலோத்துங்க சோழனாக விருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. அக் கல்வெட்டில் குறிப்பிடப் பெற்ற இரண்டாம் இராச ராசனுடைய இரண்டு பிள்ளைகளும் பெண் மக்களாயிருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளருள் சிலர் கூறுகின்றனர். அவர்கள் பெண்மக்களாயிருந் திருப்பின், அக் கல்வெட்டில் 'பிள்ளைகளுக்கு ஒன்றும் இரண்டும் திருநட் சத்திரமாகையால்' என்ற செய்தி கூறப்பெறுதற்குச் சிறிதும் இடமில்லை. அன்றியும், அக் கல்வெட்டின் பிற்பகுதியில் ஓரிடத்தில் பெண் பிள்ளைகளைச் சொல்ல நேர்ந்தவிடத்து அவர்களைப் பெண் மக்கள் என்றே ஐயமறக் குறித்திருப்பது உணரற்பாலதாம். எனவே, அக்கல்வெட்டில் காணப்படும் 'பிள்ளைகள்' என்னுஞ் சொல் ஆண் மக்களையே உணர்த்துதல் அறியத்தக்கது.

கும்பகோணத்திற்கு மேற்புறத்தி லுள்ளதும் இக்காலத்தில் தாராரசுரம் என்று வழங்கிவருவதுமாகிய இராசராசபுரத்தி லுள்ள இராசராசேச்சுரம் என்னும் சிவன் கோயில் இரண்டாம் ராசராச சோழனால் எடுப்பிக்கப்பெற்றது என்பது தக்கயாகப் பரணியாலும் கல்வெட்டுக்களாலும் நன்கு அறியக் கிடக்கின்றது.

1. Quarterly Journal of Mythic Society, Vol. XIX, pp. 62 and 63.

2. த.பரணி, தா. 772.