உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

163

பெருமக்களை நன்கு ஆதரித்து வந்தனன். இவன் அவைக்களப் புலவராக விளங்கியவர் வீராந்த பல்லவரையர் ஆவர். இப் புலவரது வேண்டுகோளின்படி இவ் வரசர்பிரான் காலவிநோத நிருத்தப் பேரரரையனான பாரசவன் பொன்னன் என்பவனுக்குத் திருக்கடவூர்க் கோயிலில் 'நட்டுவ நிலை' என்னும் விருத்தி அளித்தனன் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகின்றது. இப் புலவர் நம் குலோத்துங்கன் மீது பிரபந்தங்களும் பல தனிப்பாடல்களும் இயற்றியிருத்தல் கூடும். அவையெல்லாம் இந்நாளில் கிடைக்காமற் போயினமை வருந்தத்தக்கது.

1

நேமிநாதம், வச்சணந்தி மாலை, வெண்பாப் பாட்டியல் என்ற இலக்கண நூல்களை இயற்றியவரும் களந்தை வச்சணந்தி முனிவரின் மாணவரும் ஆகிய குணவீர பண்டிதர் என்பார் இவ்வரசன் காலத்தில் வாழ்ந்த புலவரே யாவர். வெண்பாப் பாட்டியலின் பாயிரத்தில் திரிபுவனதேவன் என்ற வேந்தன் காலத்தில் அந்நூல் இயற்றப்பெற்ற செய்தி கூறப்பட்டுள்ளது.* அதில் கூறப்பெற்ற திரிபுவன தேவன் என்பார் திரிபுவன வீரதேவன் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற நம் குலோத்துங்கச் சோழனே யாவான் என்பது ஐயமின்றித் துணியப்படும். எனவே, இம் மன்னனால் ஆதரிக்கப் பெற்ற புலவர் பெருமக்களுள் குணவீர பண்டிதரும் ஒருவ ரென்பது தெள்ளிது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாய் இவ்வேந்தன் காலத்தில் நிகழ்ந்ததோர் அரிய நிகழ்ச்சி மாபாரதம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டமையே யாம். அப் பெருஞ் செயலை ஆற்றியவர் தொண்டை மண்டலத்துக் குன்றவர்த் தனக் கோட்டத்து இல்லத்தூர் நாட்டு அரும்பாக்கமுடையான் அறநிலை விசாகன் திரைலோக்ய மல்லன் வத்சராசன் என்பவர்.

1. Ins. 255 of 1925.

நிருத்தம் வல்லார்க்குக் கோயில்களில் அளிக்கப்பெறும் இறையிலி நிலங்கள் நட்டுவக் காணி எனவும் நிருத்த போகம் எனவும் அக்காலத்தில் வழங்கியுள்ளமை அறிக.

2. இந்நூல் யார் காலத்துச் செய்ததோவெனின்

குருத்தவா மணிமுடிக் கொற்றவர் கோமான்

திருத்தகு மணிமுடித் திருபுவன தேவன்,

என்னும் அரசன் காலத்திற் செய்ததென் றுணர்க (வச்சணந்தி மாலை வெண்பாப் பாட்டியல் பாயிரவுரை) என்பதனால் இதனை அறியலாம்.