உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




180

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

ராசனாகிய நிஷத ராசனும், அந்நாட்டு ஊருடைப் பெருமாளான எதிரிலி சோழக் கடம்பராயனும்,* நம் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்தில் விளங்கிய அரசியல் தலைவர்கள் என்பது இன்னோர் கல்வெட்டுக்களால் நன்கு அறியக்கிடக்கின்றது.

நம் குலோத்துங்கனது ஆளுகையின் தொடக்கத்தில் கடப்பை, நெல்லூர், சித்தூர் ஜில்லாக்களில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த சில தெலுங்கச் சோழர்கள் இவ்வேந்தற்குத் திறை செலுத்தாமல் முரண்பட்டிருந்தனர் என்பதும் பிறகு இவன் அவர்களைப் போரில் வென்று முன்போல் தனக்குக் கப்பஞ் செலுத்தும் சிற்றரசர்களாகச் செய்துவிட்டான் என்பதும் முன்னர் விளக்கப்பட்டுள்ளன. பொத்தப்பி, நெல்லூர் ஆகிய ஊர்களிலிருந்து அரசாண்டு கொண்டிருந்த அக் குறுநில மன்னர்கள் இவனது ஆணைவழி ஒழுகி உற்றுழியுதவி வந்தமையும் அறியற்பால தாம். அத்தெலுங்கச் சோழருள், மதுராந்தக பொத்தப்பிச் சோழன், அவன் புதல்வன் நல்ல சித்தரசன், சோடன் திருக்காளத்தி தேவன் என்போர் ஈண்டு குறிப்பிடத் தக்கவராவர். நெல்லூர் கடப்பை ஜில்லாக்களில் காணப்படும் சில கல்வெட்டுக்களால் இவர்கள் நம் குலோத்துங்கனுக்குக் கீழ்ப்பட்டிருந்த சிற்றரசர்கள் என்பது நன்கு புலனாகின்றது.

சோழ இராச்சியத்திலிருந்த குறுநில மன்னர்களும் தலைவர் களும் தம் சக்கரவர்த்தியின் அரசாங்கம் இனிது நடைபெறுமாறு தாம் நடந்து கொண்டமையோடு போர் நிகழ்ச்சிகளில் படைத் தலைமை வகித்து உதவி புரிந்தும் வந்தனர். இராச்சியத்தின் நலங்கருதி இவர்கள் தங்களுக்குள் உடன் படிக்கை செய்து கொள்வதும் உண்டு. அத்தகைய உடன் படிக்கைகள் சில கோயில் களில் வரையப் பெற்றிருத்தலை இந் நாளிலும் பார்க்கலாம்.

1. Ins. 311 of 1928; Inscriptions of the Pudukkottai State. Nos. 174, 168 and 161.

2. Inscriptions of the Pudukkottai State. No. 169.

3. Nellure Inscriptions, N. 67; G. 86; R. 8 and 66.

4. Ins. 582 of 1907; Ins. 435 of 1911; Ins. 601 of 1907.

5. Ins. 254 of 1919; Ins. 440 of 1913; Ins. 223 of 1904; Ins. 483 of 1908; S.I.I., Vol. VII, No. 127: Ibid. Vol. VIII, No. 106; Ins. 435 of 1913.