உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




210

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

ஆண்டு முதல் அங்கு நடைபெற்றதாதல் வேண்டும். அவ்வூரில் போசளரால் எடுப்பிக்கப்பெற்ற போசளேச்சுரம் என்ற கோயிலும் இடிந்து அழிந்து கிடக்கும் அவர்களது கோட்டையும் இருத்தலை இன்றுங் காணலாம். முதலில் சோழர்க்கு உதவிபுரிய வந்த போசளர் பிறகு சோணாட்டு ஆட்சியிலும் உரிமை பெற்றமை ஈண்டு அறியத்தக்கது.

முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன் படையெழுச்சியும் சோழ இராச்சியத்தின் வீழ்ச்சியும்

பெரு வீரனாகிய சுந்தர பாண்டியன், தான் கி. பி. 1251-ல் முடி சூட்டப்பெற்ற பிறகு பாண்டிய இராச்சியத்தை யாண்டும் பரப்பி அதனை உயர் நிலைக்குக் கொணரக் கருதினான். அவ்வெண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டுச் சில ஆண்டுகள் வரையில் தன் நாட்டில் படைதிரட்டி அதனைப் பெருக்கிக் கொண்டான். தன் படையின் பெருக்கத்தையும் ஆற்றலையும் நன்கறிந்து கொண்டபின்னர், அப்பாண்டி வேந்தன் கி. பி. 1257-ல் சோழ நாட்டின் மீது படையெடுத்து இராசேந்திரனைப் போரில் வென்று தனக்குக் கப்பஞ் செலுத்தும் சிற்றரசனாகச் செய்து விட்டான்; அன்றியும், இவனுக்கு உதவி புரியவந்த போசள வீரசோமேசுவரனை வென்று அவன் நாட்டிற்குத் துரத்தினான். மீண்டும் அச்சோமேசுவரன் சுந்தரபாண்டிய னோடு கி. பி. 1264-ல் போர் தொடங்கியபோது கண்ணனூரில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டான். பிறகு, அப் பாண்டி மன்னன், கோப் பெருஞ்சிங்கனது சேந்தமங்கலத்தை முற்றுகை யிட்டு அவனைத் தன் ஆட்சிக்குட்பட்ட குறுநில மன்னனாக ஆக்கிவிட்டு, மகத நாட்டையும் கொங்கு நாட்டையும் கைப்பற்றி இறுதியில் தெலுங்கச் சோழனாகிய கண்ட கோபாலனைப் போரிற் கொன்று அவனது தலைநகராகிய நெல்லூரில் வீராபிடேகஞ் செய்து கொண்டனன்.2 எனவே, சுந்தர பாண்டியனது பேரரசு தெற்கே குமரிமுனை முதல் வடக்கே கிருஷ்ணை என்ற பேராறு வரையில் பரவியிருந்தது என்பது நன்கு துணியப்படும். சோழ இராச்சியம் தன் பெருமை இழந்து 1. Ep. Ind., Vol. III, pp. 11, and 14.

2. பாண்டியர் வரலாறு, பக், 52.

1