உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




216

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

காண்போர் கண்களைக் கவரும் வனப்பினவாய் இஞ்ஞான்றும் நிலைபெற்றிருத்தலை யாவரும் காணலாம். அவர்களது பேராதர வினால் இயற்றப் பெற்று வெளிவந்துள்ள திருத்தொண்டர் திருவந்தாதி, வீரசோழியம், கலிங்கத்துப் பரணி, விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், குலோத்துங்க சோழனுலா, இராசராச சோழனுலா, தக்கயாகப் பரணி, தண்டியலங் காரம், பெரிய புராணம் என்று வழங்குந் திருத்தொண்டர் புராணம் முதலான தமிழ் நூல்கள் நம் அகவிருள் போக்கி அறிவுச்சுடர் கொளுத்தும் செஞ்ஞாயிறாக இன்றும் விளங்கு கின்றன.

இதுகாறுங் கூறப்பெற்ற சில ஊர்களும் ஆறுகளும் ஏரிகளும் கோயில்களும் தமிழ் நூல்களும் சோழ மன்னர்களின் பொன்றாப் புகழுக்கு நிலைக்களங்களாகவும் அவர்களது ஈடும் எடுப்புமற்ற பெருமையினைப் பிற்காலத்தினர்க்கு உணர்த்தும் கலங்கரை விளக்கங்களாகவும் இக்காலத்தில் நின்று நிலவுதல் அறியற்பாலதாகும்.