உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் இலக்கிய வரலாறு

15

லாமையால் சேரநாடு, சோழநாடு, நடுநாடு, தொண்டைநாடு ஆகிய புறநாடுகளுக்கு அன்னோரை யனுப்பி விட்டனன் எனவும் அதன் பின்னர் மதுரையம்பதியில் தமிழ்ச் சங்கமே நடை பெறாமல் முடிவெய்தியது எனவும் செவிவழிச் செய்திகளில் நம்பிக்கையுடையோர் சிலர் கூறுகின்றனர். பிறிதொருசாரார், தமிழ்ப்புலவர்கள் சங்கத்தில் அரங்கேற்றுவதற்குக் கொண்டு வரும் நூல்களை அவர்கள் படித்து விளக்கும் போது, சங்கப் புலவர்கள் கீழறையிலுள்ள சிலரைக் கொண்டு அவற்றை எழுதுவித்து, பிறகு அந்நூல்கள் சங்கத்திலும் உள்ளன என்று கூறி அவற்றை எடுத்துக்காட்டி, அன்னோரை அவமதித்து அனுப்பிவந்தனர் என்றும், அவ்வடாத செயலை ஒழிக்க வேண்டி இடைக் காடனாரும் ஆசிரியர் திருவள்ளுவனாரும் முறையே ஊசி முறியும் திருக்குறளும் இயற்றிக்கொண்டு தமிழ்ச் சங்கத் திற்குச்சென்றனர் என்றும், அப்போது ஊசிமுறிப் பாடல்களைக் கீழறையிலிருந்தோர் தம் செவியுணர்வுகொண்டு எழுத முடியாமையால் சங்கப் புலவர்கள் தம் செயலில் தோல்வி யுற்றனர் என்றும், பிறகு திருக்குறள் அரங்கேற்றப் பெற்றபோது அந்நூலாசிரியரோடொப்பச் சங்கப் புலவர்கள் வீற்றிருக்க இயலாமையால் சங்கம் அழிவுற்றதென்றும், எனவே திருக்குறள் அரங்கேற்றமே கடைச்சங்கம் வீழ்ச்சி எய்தியமைக்குக் காரண மாகும் என்றும் கூறுகின்றனர். அன்னோர் கொள்கைகள் வலிவுடையனவா என்பதுஆராயற்பாலதாகும்.

கடைச்சங்க நாளில் பாண்டி நாட்டில் பஞ்சமொன்று தோன்றியது என்பதும் அக்காலத்தில் சங்கப் புலவர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று உயிர்வாழ நேர்ந்தது என்பதும் இறையனார் அகப்பொருளுரையால் நன்கறியக் கிடக்கின்றன. அவ்வுரை கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரே எழுதப் பெற்ற தாயினும், அதில் கூறப்பட்டுள்ள கடைச்சங்க காலத்து வற்கட நிகழ்ச்சியை மறுத்துரைத்தற்கு ஏது சிறிதுமில்லை எனலாம். அன்றியும், அந்நிகழ்ச்சி, 'பன்னீ ராண்டு பாண்டி நன்னாடு மன்னுயிர் மடிய மழைவள மிழந்து' என்று மணிமேகலையிலும்

1. இறையனார் அகப்பொருளுரை, ப. 8 (பவாநந்தம் பிள்ளை பதிப்பு).