உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3

1. சுந்தரமுர்த்திகளது காலம்

சைவ சமய குரவருள் ஒருவராகிய சுந்தரமூர்த்திகள் அறுபான் மும்மை நாயன்மார்களுள் இறுதியில் வாழ்ந்தவரென்பது அவர் திருவாய்மலர்ந்தருளிய திருத்தொண்டத் தொகையால் நன்கு விளங்குகின்றது. அப்பெரியார் இந்நிலவுலகில் வாழ்ந்த காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முதற்பகுதி என்று தஞ்சை, ராவ்பகதூர் K.S. சீநிவாசபிள்ளை அவர்கள் தமது 'தமிழ் வரலாறு' என்னும் நூலில் கூறியுள்ளார். திருவாங்கூரில் கல்வெட்டிலாகாவிற்குத் தலைவராயிருந்து காலஞ் சென்ற T.A. கோபிநாதராயர் அவர்கள் அவ்வடிகளது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகுமென்று ‘செந்தமிழ்’ மூன்றாந் தொகுதியில் வரைந்துள்ளார். ஆகவே, இவ்விரு ஆராய்ச்சியாளரும் சற்றேறக் குறைய ஒத்த கொள்கையினர் ஆவர் என்பது வெளிப் படை.

இனி, அடிகள் காலத்தை ஆராய்ந்து காண்டற்கு இன்னோர் எடுத்துக் கொண்ட கருவிகளை நிரலே ஆராய்ந்து அவற்றின் வன்மை மென்மைகளைக் காண்போம். சேரமான் பெருமாள் நாயனார் என்று வழங்கும் கழறிற்றறிவார் காலத்தில் பாண்டி நாட்டில் அரசு புரிந்தவன் வரகுணபாண்டியன் என்பதும், கழறிற்றறிவார்க்குப் பெருநட்பினராகிய சுந்தரமூர்த்திகளும் அப்பாண்டியன் காலத்தவரே யாதல் வேண்டும் என்பதும் அவர்கள் கூறும் கருவிகளுள் முதன்மையானவைகளாம். கழறிற்றறிவார் சுந்தரமுர்த்திகளுக்கு நட்பினராகவிருந்து அவருடன் திருக்கைலை சென்றவர் என்பது பெரிய புராணத்தால் அறியக் கிடக்கும் உண்மையாகலின், அதிற் சிறிதும் ஐயமில்லை. ஆனால், கழறிற்றறிவார் காலத்தில் மதுரைமாநகரில் வாழ்ந்த பாண்டிய மன்னன் வரகுணன் ஆவன் என்று அன்னோர் கூறுவது தக்க வலியுடைத்தன்று. பெரியபுராணத்தின் ஆசிரிய ராகிய சேக்கிழார், சுந்தரமூர்த்திகளும் கழறிற்றறிவாரும் பாண்டி