உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92




16. விரையாக்கலியும் விடேல் விடுகும்

1. விரையாக்கலி

சென்ற ஆண்டில், திருப்புறம்பியத்திலுள்ள சிவாலயத்தில் காணப்படும் கல்வெட்டுக்களுள் சிலவற்றை யான் எழுதி வந்தபோது மூன்று கல்வெட்டுக்களில் ‘விரையாக்கலி‘ என்பது குறிக்கப் பெற்றிருத்தலைக் கண்டேன். இம்மூன்றனுள் ஒன்று முதல் இராசராச சோழனது ஆறாம் ஆண்டில் பொறிக்கப் பெற்றதாகும். அது, விரையாக் கலியென்னும் நிறைகோல் ஒன்று திருப்புறம்பிய ஆலயத்தில் இருந்தது என்று உணர்த்துகின்றது. மற்றொன்று, கங்கைகொண்ட சோழன் என்று வழங்கப் பெறும் முதல் இராசேந்திர சோழனது பதினாறாம் ஆண்டில் வரையப்பெற்றது. அது திருப்புறம்பியத்தில் அந்நாளிலிருந்த ஒரு தெரு விரையாக்கலிப் பெருந்தெரு என வழங்கி வந்தது என்று தெரிவிக்கின்றது. மூன்றாங் கல்வெட்டு, குலோத்துங்க சோழன் காலத்தியது. அதில் குறிக்கப் பெற்றவன் முதற் குலோத்துங்க சோழன் அல்லன் என்பது வெளிப்படை; எனவே, மற்ற இருவருள் ஒருவன் ஆதல் வேண்டும் அக்கல்வெட்டின் இறுதியில் ‘திருவாணை-திருவிரையாக்கலி‘ என்பது காணப்படு கின்றது. முதல் இரண்டு கல்வெட்டுக்களால் ஒரு நிறைகோலும் ஒரு தெருவும் விரையாக்கலி என்ற பெயரோடு வழங்கப் பெற்றன என்பது புலனாகின்றது. சோழ மன்னர்களது பெயர்களிட்டு வழங்கப் பெற்ற பெருந்தெருக்கள் பல அந்நாளில் தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம், திருவரங்கம் முதலிய நகரங்களில் இருந்துள்ளன என்பது சயங்கொண்ட சோழப் பெருந்தெரு, வீரசோழப் பெருந்தெரு, திருவிக்கிரமன் திருவீதி, குலோத்துங்கன் திருவீதி என்பவற்றால் நன்கு அறியப்படுகின்றது. விரையாக்கலிப் பெருந்தெருவென்ற தொடரில் விரையாக்கலி என்பது எவ்வேந்தனையும் குறிக்கவில்லை. ஆதலால் அஃது ஆராய்ந்துணர்தற்குரியதாகும். மூன்றாம்