உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

109


கின்றது. சோழமன்னரது ஆட்சிக்காலங்களில் நம் தமிழகத்தில் உள்ள பல நகரங்கள் அவ்வேந்தர்களது பெயர்களால் வழங்கப் பெற்றுவந்தன என்பது பல கல்வெட்டுக்களால் தெரிகின்றது. கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றாகவுள்ளதும் திருவானிலை என்னும் திருக்கோயிலைத் தன்னகத்துக் கொண்டது மாகிய கருவூர் அந்நாளில் முடி வழங்கு சோழ புரம் என்ற பெயரையும் உடையதாக இருந்தது என்பது அவ்வூரிலுள்ள கல்வெட்டுக்களால் வெளியாகின்றது. (South Indian Inscriptions Vol. III. Nos. 23 and 24) நம் சோழமண்டலத்திற் காவேரிக்குத் தென்பால் உள்ள தலங்களுள் ஒன்றாகிய பழையாறு என்ற நகர் முடிகொண்ட சோழபுரம் என்னும் பெயரையும் முற்காலத்தில் உடையதாக இருந்தது. (Inscriptions No. 271 of 1927). அவ்வூர்கள் கருவூராகிய முடிவழங்கு சோழபுரம் எனவும் பழையாறாகிய முடிகொண்ட சோழபுரம் எனவும் கல்வெட்டுக்களில் வரையப் பெற்றிருத்தல் போல ஏர் என்னும் தலமும், ஏராகிய மும்மடிசோழமங்கலம் என்று குறிக்கப் பெற்றுள்ளது. மும்முடி சோழன் மும்மடிச் சோழன் என்ற பெயர்கள் முதல் இராசராசசோழனுக்கு வழங்கி வந்தன என்று தெரிகிறது. எனவே, முதல் இராசராசசோழனது ஆட்சிக் காலத்திலேதான் ஏர் என்னும் தலம் மும்மடி சோழமங்கலம் என்ற பெயரை எய்தியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள முதல் இராசராசசோழனது கல்வெட்டும் இதனை வலியுறுத்துகின்றது. ஆகவே, சோழமன்னரது ஆட்சிக் காலங்களில் மும்மடிசோழ மங்கலம் ஏர் என்ற பெயர்களை உடையதாயிருந்த ஊர் இந்நாளில் ஏரகரம் என்று வழங்கிவருகின்றது என்பதும், அஃது அப்பர் சுவாமிகளாற் குறிக்கப் பெற்ற வைப்புத் தலங்களுள் ஒன்று என்பதும் நன்கு வெளியாதல் காண்க.

குறிப்பு : இஃது தமிழ்ப்பொழில் துணர் 10 மலர் 6-இல் வெளி வந்த கட்டுரையின் திருந்திய வடிவமாகும்.