உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


சென்று யான் நேரிற் பார்த்த போது இது சோழ மண்டலத்திலுள்ள தொன்மை வாய்ந்த ஊர்களுள் ஒன்றாகவே காணப்பட்டது. இதில் கல்வெட்டுக்கள் உள்ள கோயில் இல்லாமையால் பழைய செய்திகளுள் ஒன்றும் புலப்படவில்லை. ஆயினும், இஃது ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் என்று சொல்லப்படுவதோடு அவர் பிறந்து வளர்ந்த வீடும் காண்பிக்கப்படுகிறது. இக்காலத்திலும் இம் மணக்குடியில் வாழ்ந்து வரும் மக்கள் செங்குந்தர் மரபினரே யாவர்.

இனி, கி.பி. 1063 முதல் கி.பி 1070 வரை ஆட்சிபுரிந்த வீர ராசேந்திர சோழன் காலத்தில் இவ்வூரிலிருந்த தலைவன் ஒருவனைக் குறிக்கும் ஒரு கல்வெட்டு, செங்கற்பட்டுக் கோட்டம் திருமுக்கூடலில் உள்ளது. அது 'இந்நாடு கூறுசெய்த அதிகாரிகள் சோழமண்டலத்து விஜய ராஜேந்திர நாட்டு இடையள நாட்டு மணக்குடியான் பசுவதி திருவரங்க தேவரான ராஜேந்திர மூவேந்தவேளார்' என்பதாம். எனவே, சோழர்கள் காலத்தில் ம்மணக்குடி பெருமை வாய்ந்த ஊராக இருந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது.