உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121




21. இடவையும் இடைமருதும்

சைவசமயகுரவருள் ஒருவராகிய மணிவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருவார்த்தை என்னும் பதிகத்திலுள்ள,

‘மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க அவர்க்கருள் செய்த ஈசன் ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலந்திகழும் கோல மணியணி மாடநீடு குலாவும் இடவை மடநல்லாட்குச் சீலமிகக் கருணையளிக்குந் திறமறி வார்எம் பிரானாவாரே’

என்ற பாடலுக்கு உரைகண்ட பேராசிரியர் ஒருவர், இதில் கூறப் பெற்றுள்ள இடவை என்னுந் திருப்பதி சோழநாட்டிலுள்ள திருவிடை மருதூரேயாம் என்று எழுதியுள்ளனர். அன்றியும், திருப்பதியிலிருந்து வெளிவரும் கீழ்த்திசைக்கலைக் கழகப் பத்திரிகையில் காணப்படும் 'மாணிக்கவாசகர் காலம்' என்ற கட்டுரையிலும் இடவை என்பது திருவிடைமருதூர் என்று வரையப்பெற்றுள்ளது.[1] எனவே, திருவாசக உரையாசிரியரும் மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சியாளரும் 'இடைமருது' என்ற ஊர் 'இடவை' என்று மருவி வழங்கியிருத்தல் வேண்டும் எனக்கருதியுள்ளனர் என்பது வெளிப்படை. இடைமருதும் இடவைவும் ஓர் ஊரேயாகும் என்னும் அன்னோர் கருத்திற்கு முரணாக அவை இரண்டும் வெவ்வேறு ஊர்கள் என்பதற்குத் தக்க சான்றுகள் காணப்படுகின்றன. ஆகவே, அதனை ஈண்டு ஆராய்வாம்.

திருநாவுக்கரசு அடிகள் பாடியருளி க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகத்திலுள்ள

இடைமரு தீங்கோய் இராமேச்சரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப் பேரூர், சடைமுடி சாலைக் குடி தக்களூர் தலையாலங் காடு தலைச் சங்காடு, கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர் கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு,


  1. Journal of Sir Venkateswara Oriental Institute. Vol. IV. page 165