உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22. கிராமம்

தென்னார்க்காடு மாவட்டத்தில் கிராமம் என்ற பெயருடைய ஊர் ஒன்றுள்ளது. இது விழுப்புரத்திற்குத் தென்மேற்கே பத்துக்கல் தூரத்திலுள்ள திருவெண்ணெய் நல்லூர் ரோடு என்ற புகை வண்டி நிலையத்திற்கு அண்மையில் இருக்கின்றது. இவ்வூரிலிருந்து வடக்கே இரண்டுகல் சென்றால் சுந்தரமூர்த்தி சுவாமிகளை இறைவன் தடுத்தாட் கொண்ட தலமாகிய திருவெண்ணெய் நல்லூரைக் காணலாம். நகரங்களும் பட்டினங்களும் தவிர எஞ்சியுள்ள தமிழ் நாட்டுச் சிற்றூர்கள் எல்லாம் கிராமங்களென்றே பொதுவாக வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ஓர் ஊர் மாத்திரம் கிராமம் என்ற சிறப்புப் பெயரால் வழங்கி வருவது வியப்பைத் தருகின்றது. ஆகவே, இவ்வூர் எவ்வாறு இப்பெயர் எய்தியது என்பது ஆராய்தற்குரிய தொன்றாம். தமிழ் நாட்டூர்களின் பழைய பெயர்களையும் அவ்வூர்கள் இடைக்காலத்தில் எய்திய வேறுபெயர்களையும் அவற்றின் வரலாற்றையும் அறிந்துகொள்வதற்குத் தக்க ஆதாரங்களாக இருப்பவை, பன்னிரு திருமுறைகளும் தமிழ்வேந்தர்கள் காலத்தில் வரையப்பெற்ற கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் ஆகும். எனவே, அவற்றின் துணை கொண்டு இவ்வூரின் பழைய பெயரை ஆராய்ந்தறிய முயலுவோம்.

இவ்வூரிலுள்ள திருக்கோயில் சைவசமய குரவர் நால்வருள் ஒருவராகிய திருநாவுக்கரசு அடிகளால் பாடப்பெற்ற பெருமையுடையதாகும். இவ்வடிகளது திருப்பதிகத்தால் இத்திருக் கோயில் திருமுண்டீச்சரம் என்ற பெயருடையது என்பதும் இதில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் சிவலோகநாதர் என்று அக்காலத்தில் வழங்கப் பெற்றனர் என்பதும் இவ்வூர் தென் பெண்ணை யாற்றங்கரையிலுள்ளது என்பதும் நன்கு புலனா கின்றன. இச்செய்திகளை,