உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களுள் பரஞ்சோதி முனிவரது திருவிளையாடற் புராணமும் தாயுமான அடிகள் பாடலும், சிவஞான முனிவர் இயற்றிய காஞ்சிப் புராணம் முதற்காண்டமும் பிரபந்தங்களும் சிவஞான போத மாபாடியம் என்ற பேருரையும் அம்முனிவருடைய மாணாக்கர் கச்சியப்ப முனிவருடைய தணிகைப் புராணமும் காஞ்சிப் புராணம் இரண்டாம் காண்டமும் குறிப்பிடுதற்குரிய பெருமை வாய்ந்தவை எனலாம்.

கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டி தோன்றிய நூல்களுள் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் புராணங்களும் பல பிரபந்தங்களும் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியமும் சிறந்தவைகளாகும்.

இவ்விருபதாம் நூற்றாண்டில் நம் நாடு சுதந்திர நாடாகிச் சிறப்புற்று விளங்குகிறது. பேரறிஞர்களும், தமிழ்ப் புலவர்களும், சிறந்த எழுத்தாளர்களும் கவிஞர்களும் பல்வகைப்பட்ட நூல்கள் எழுதித் தமிழ்த் தொண்டுபுரிந்து வருவது யாவரும் அறிந்ததேயாகும். தமிழ் எழுத்தாளர் சங்கமும், தமிழ்த் தொண்டு புரியும் அறிஞர்களும் நீடுவாழுமாறு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக!