உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

197


அக்கோயில் இன்றும் உளது. அதில் எழுந்தருளியுள்ள தேவியை இவர் 'ஆற்றங்கரைச் சொற்கிழத்தி வாழியே' என்று தம் தக்கயாகப் பரணியில் வாழ்த்தியிருப்பது அறியற் பாலதாம்.

இவ்வாறு சோழமன்னர் மூவர்க்கும் அரசவைப்புலவராக விளங்கிய இக்கவிஞர்க்குக் கௌடப் புலவர், கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி, காளக்கவி, சருவஞ்ஞ கவி என்னும் சிறப்புப் பெயர்கள் அக்காலத்தில் வழங்கி வந்தன. இவர் உலக இயல்பைக் கடந்து, வருணனைகள் அமைத்துச் செய்யுட்கள் பாடிவந்தமை பற்றிக் கௌடப்புலவர் எனப் பட்டனர். செய்யுள் இயற்றும் ஆற்றலில் அக்காலத்திலிருந்த புலவர் பெருமக்களுள் சிறந்து விளங்கியமையால் கவிராட்சசன் எனவும் கவிச்சக்கரவர்த்தி எனவும் வழங்கப் பெற்றனர்; சோழ மன்னர்கள் அளித்த காளம் என்னும் விருது பெற்றிருந்தமையால் காளக்கவி என்று சொல்லப்பட்டனர். தமிழ்மொழி வடமொழி ஆகிய இரண்டிலுள்ள நூல்களை நன்கு பயின்று தாம் உணர்ந்த அரிய கருத்துக்களைத் தெளிவாகப் புலப்படுத்தித் திறம்படச் செய்யுள் அமைக்கும் ஆற்றல் பெற்றிருந்த காரணத்தால் சருவஞ்ஞகவி என்றும் வழங்கப் பெற்றனர். இங்குக் கூறப்பட்ட சிறப்புப் பெயர்கள் எல்லாம் தக்கயாகப் பரணியாலும் அதன் உரையாலும் சோழ மண்டல சதகத்தாலும் அறியப்படுவன ஆகும்.

இவர் இருவேறுலகத்தியற்கைக்கு முரணாகத் திருமகள், கலைமகள் ஆகிய இருவரது திருவருட் பேற்றிற்கும் உரியவராய்ப் பெருஞ் செல்வமும் அருங்கல்வியும் எய்திச் சிறந்து வாழ்ந்தவர். செய்ந் நன்றியறிதல், பிறபுலவர் பெருமக்களை உளம் உவந்து பாராட்டுதல், மாணாக்கர்கட்குப் பாடஞ்சொல்லி அன்னாரை நல்வழிப்படுத்தல் ஆகிய உயர்ந்த குணங்கள் இவர்பால் நன்கு அமைந்திருந்தன என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

இவர் காலத்திருந்த புலவர்கள் நம்பிகாளியார், நெற் குன்றவாண முதலியார், தமிழ்த் தண்டியாசிரியர், தக்கயாகப் பரணி உரையாசிரியர், தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பேராசிரியர் முதலானோர் ஆவர். கம்பர், புகழேந்தி, சேக்கிழார் ஆகியோர் இவர் காலத்தில் இருந்தவர்கள் என்பது சிலருடைய