உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3



1.சோழர் குடி

நமது தமிழகத்தின்கட் செங்கோலேச்சிய முடியுடைத் தமிழ் வேந்தர் மூவரில் இக்குடியினர் சோணாட்டையாளும் உரிமை பூண்டவராவர். இவர்கள் இடைக்கட்புகுந்து இந்நாட்டைத் தம்மடிப்படுத்தியாள்வரல்லரென்பதும், படைப்புக்காலந்தொட்டே இந்நாட்டின் அரசுரிமை பூண்டவர்களென்பதுஞ் செந்தமிழ்ப் பெரியோர் கொள்கைகளாம். இதனை “வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி- பண் பிற்றலைப் பிரிதலின்று” (திருக்குறள் - குடிமை 5) என்பதன்உரையில், 'பழங்குடி- தொன்று தொட்டு வந்தகுடி; தொன்றுதொட்டுவருதல் சேர சோழ பாண்டியரென்றாற்போலப் படைப்புக்காலந் தொடங்கி மேம்பட்டு வருதல்' என்று ஆசிரியர் பரிமேலழகர் கூறியவற்றால் நன்கறியலாம். இக்குடியினரது நாடுதான் புனனாடெனப் படுவது; இவர்கள்தான் வளவரென்று சிறப்பித்துப் போற்றப்படுவோர்; இவர்கள் நாடே சோறுடைத்து; இவர்கள் நாடுதான் எண்ணிறந்த சிவாலயங்களைத் தன்னகத்துக் கொண்டு விளங்குவது; இவர்கள் தான் சைவசமயத்தைப் போற்றிவளர்த்து வந்த உத்தமச் சைவசீலரெனப்படுவோர். ‘வளவ னாயினு மளவறிந் தழித்துண்' என்னும் முதுமொழியில் இக்குடியினரே பொருட் செல்வத்தின் மேம்பாட்டிற்கோரெல்லையாக வைத்துக் கூறப்பட்டிருத்தல் காண்க. பலசொல்லியென்? மூவேந்தருள்ளும் சோழர் தாம் உணவுப் பொருள்களுஞ் சிவாலயங்களும் மிகுந்துள்ள நீர்வளம் பொருந்திய நாடுடையார் என்று சிறப்பிக்கப்படுவாரென்க.

கறவைமுறை செய்த காவலனும் புள்ளுறுபுன்கண்டீர்த்த புரவலனும் இக்குடியிற் தோன்றியோர்களேயெனின், இக்குடிக்கு, யான் வேறு ஏற்றமுங் கூறவேண்டுமோ? பாண்டியர்களைப் போன்று இவர்கள் தமிழ்ச்சங்கம் நிறுவாவிடினும் செந்தமிழ்