உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


வளர்த்த பெருமையில் அவர்கட்கு இவர்கள் சிறிதுங்குறைவு பட்டிலரென்பது பழையசங்க நூல்களையும் பிறநூல் களையும் ஆராய்வார்க்கு நன்குபுலப்படா மலிராது. என்னை? பதினாறு நூறாயிரம்பொன்னீந்து பட்டினப்பாலை கொண்டோன் கரிகால் வளவனன்றோ? பதினொரு சைவத்திரு முறைகள், திருத்தொண்டர் புராணம், கம்பனது இராமாவ தாரம், வீரசோழியம் முதலிய அருமைவாய்ந்த நூல்களெல்லாம் இவர்களது வள்ளன்மையாலும் பெருமுயற்சியாலுமன்றோ நம்மனோர் கண்டுகளிக்கும் வண்ணம் வெளிவந்துள்ளன.

இவர்கள் சூரியவம்சத்தைச் சேர்ந்தவர்கள்,[1] இவர்கட்குரிய போர்ப்பூவுந் தார்ப்பூவும் முறையே ஆத்தியும் முல்லையுமாம்; கொடி புலிக்கொடியாம். பண்டைக்காலத்து இவர்களது தலைமை நகரங்கள் உறையூரும் காவிரிப் பூம்பட்டினமுமாயிருந்தன; பின்னர், தஞ்சையும் கங்கைகொண்ட சோழபுரமும், காஞ்சியும் தலைமை நகரங்களாயின.

இக்குடியிற்றோன்றிச் சோணாட்டையாட்சி புரிந்த மன்னர் பலராவர், இவர்களது சரிதங்கள் முழுதுந் தொடர்ச்சியாய்த் தற்காலத்து அறிந்துமகிழ்தற்கிடமில்லாமற் போயின. ஆயினும், திருவுடைய ரேயன்றித் தெள்ளியருமாய்த் தோன்றி வீரமும், புகழும் என்றும் நின்றுநிலவப் பல அரும்பெருஞ் செயல்களைச் செய்துமுடித்து இந்நிலவுலகத்தை விட்டகன்ற பெருந்தகையாளர் பலர் சரிதங்கள், பழைய தமிழ்ப் புலவர்களியற்றியுள்ள செய்யுட்களினாலும் சிலா தாம்பிரசாசனங்களினாலும் அறியப்படுகின்றன. கடைச்சங்க காலத்திற்குப் பின்னர் விளங்கிய சோழமன்னர்களின் சரிதங்களை, நன்காராய்ந்து, தொடர்ச்சி யாக, ஸ்ரீமான் T.A. கோபிநாதராயர் M.A. அவர்களும் ப்ரொபஸர் கிருஷ்ணஸாமி ஐயங்கார் M.A அவர்களும் முறையே தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவெளியிட்டிருக்கிறார்கள். அரும்பெரும் முயற்சிகொண்டு சோழ சரித்திர அமுதை நம் தமிழகத்திற்கும் புறநாடுகட்கு மூட்டிக்-


  1. இவர்களைச் சூரியவம்சத்தினர் என்று கூறும் தமிழ்நூல் வழக்கிற்கு முரணாய் அக்கினி வம்சத்தினரென்றும் வன்னியரென்றும் தக்க பிரமாணங்களின்றி ஒரு சாரார் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்; அன்னோர் கூற்றும் பொருந்தாதென்க.