உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

5


களிப்பித்த இவ்விருபுலவர் கட்கும் நம்மவர் பெரிதும் நன்றியறிதற் கடப்பாடுடையராவர். கடைச்சங்க காலத்திற்கு முன்னர் விளங்கிய சோழமன்னர்களுள், 'வாயிற்கடை மணி நடுநாநடுங்கவாவின் கடைமணியுகு நீர் நெஞ்சுசுடத் தான்றன் அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்த' 'மனுநீதிகொண்ட சோழனும், 'புறவுநிறை புக்குப் பொன்னுலகமேத்தக் - குறை விலுடம்பரிந்த' கொற்றவனாஞ் சிபியும், ஓங்குயர் மலயத் தருந்தவனுரைப்பத் - தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியனும், ‘அமரமுனிவ னகத்தியனருளாற் காவிரி கொணர்ந்த காந்தமன்' னவனும், 'வாதராசனைவலிந்து பணி கொண்'டோனும், தாங்கள் பாரதமுடிப்பளவுநின்று தருமன்றன் கடற் படைதனக்குதவிசெய்’ தோனுமாய சிலரது பெயர்கள் மாத்திரங் கேட்கப்படுகின்றன.

இனி, கடைச்சங்ககாலத்தில் விளங்கிய சோழமன்னர் பலராவர். அவர்களுள், புறநானூறு முதலிய தொகை நூல்களால் அறியப்படும் சிலரை இங்குக் குறிக்கின்றேன்.

1. முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி, 2. வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி, 3. உருவப்பஃறேரிளஞ்சேட்சென்னி. 4. கரிகாலன், 5. நலங்கிள்ளி, 6. நெடுங்கிள்ளி, 7. மாவளத்தான், 8. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், 9. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருவளவன், 10. இராஜசூயம் வேட்டபெருநற் கிள்ளி, 11. கோப்பெருஞ்சோழன், 12. சோழன் செங்கணான்.

மேற்குறித்துள்ள அரசர்பெருந்தகைகளுள் உருவப்பஃறேர் இளஞ் சேட்சென்னி. கரிகாலனதுதந்தையாவன்; கரிகாலன் 12000 சிங்களவர்களைச் சிறைபிடித்துக் கொணர்ந்து காவிரியினிரு மருங்குங்கரையெடுப்பித்துத் தங்கள் நாட்டைப் புனனாடெனவும், தங்களை வளவரெனவும் யாவருஞ் சிறப்பித்தோதும் வண்ணம் சோணாட்டை வளமுறச் சீர்படுத்திய செம்பியரேறென்ப. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான் என்போர் ஒரேகாலத்துச் சோணாட்டில் விளங்கியோரென்பது இவர்கள் தாயபாகத்தின் பொருட்டு ஆமூர், உறையூர் முதலிய இடங்களில் முற்றுகையிட்டுப் போர்புரிந்த செய்தியைக் குறிக்கும் புறப்பாடல்களால் நன்குவிளங்கும். கிள்ளிவளவன் உறையூரிலிருந்து சோணாட்டையாட்சி புரிந்தவன்; இவனுக்கு விரோதிகளாய்ச்