உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 8


தந்தையாராகிய முதற்பராந்தகசோழதேவரைக் குறித்திருப்பதோடு அவர் தில்லையம் பலத்திற்குப் பொன்வேய்ந்ததையும் கூறியுள்ளனர். அன்றியும், பத்தாம்பாடலில், “காலார் சோலைக் கோழிவேந்தன்றஞ்சையர் கோன்கலந்த, - வாராவின் சொற் கண்டராதித்தன்“ என்று தம்மையே இவர் குறித்திருப்பது அறியத்தக்கதொன்றாகும்.

இஃதிங்ஙனமாக: சோழவமிசச்சரித்திரம் எழுதிய அறிஞர் து.அ.கோபிநாதராயர் அவர்கள் திருவிசைப்பாப்பாடியவர் இரண்டாங்கண்டராதித்தரென்று அந்நூலில் வரைந்துள்ளனர்: அதற்கு அவர்கூறும் காரணமாவது: கண்டராதித்தர் முதல் இராஜராஜ சோழதேவர் தஞ்சையில் எடுப்பித்த இராசராசேச்சுரத்தைத் தம் திருவிசைப்பாவில் பாடியிருக்கின்றனர்: முதல் இராஜராஜ சோழதேவர் முதற்கண்டராதித்தரது தம்பியாகிய அரிஞ்சயன் என்பாரது பெயரர்: சுந்தரசோழரென்று அழைக்கப் பெறும் இரண்டாம்பராந்தகசோழரது புதல்வர்: ஆதலால், தஞ்சை இராசராசேச்சுரத்தைத் திருவிசைப்பாவிற் பாடியவர் முதற்கண்டராதித்தரெனக்கொள்ளின், அவர், தம் தம்பியின் பெயரரது ஆட்சிக் காலத்தும் இருந்தவராதல் வேண்டும்: ஆனால், முதற்கண்டராதித்தர் இறந்தபின்னரே அவரது தம்பியாகிய அரிஞ்சய னென்பார் செங்கோல் கைக்கொண்டனரென்று கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன: எனவே, திருவிசைப்பாப் பாடியவர் முதற்கண்ட ராதித்தர் ஆகார் என்பது, திருவிசைப்பாவிலுள்ள பதிகங்களுள் கண்டராதித்தர் இயற்றியது ஒன்றேயாகும். அப்பதிகமும் கோயிலெனப்படுந் திருச்சிற்றம்பலத்தைப் புகழ்வது. இராயர் அவர்கள் கூறியவாறு கண்டராதித்தர் இராசராசேச்சுரத்தைப் பாடிய பதிகம் திருவிசைப்பாவிற் காணப்படவில்லை. ஆனால், திருவிசைப்பாவிலுள்ள இராசராசேச்சுரப் பதிகம் கருவூர்த் தேவர் பாடியதாகும். கங்கைகொண்ட சோழீச் சுரத்தைப் பாடியவரும் இக்கருவூர்த் தேவரேயாவர். ஆகவே, கருவூர்த்தேவரி யற்றிய ராசராசேச்சுரப்பதிகத்தைக் கண்டராதித்தர் இயற்றினாரெனப்பிழையாகக்கொண்டு, அதனால், திருவிசைப் பாப் பாடியவர் இரண்டாம் கண்டராதித்தர் என்று ராயர் அவர்கள்