உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

45


நாயனார் புராணத்திலும் ஆனாய நாயனார் புராணத்திலும் முறையே கூறியுள்ள,

அங்கணகன்றம்மருங்கிலங்கணர் தம் பதிபலவுமணைந்து போற்றிச்
செங்கமலப் பொதியவிழச் சேல்பாயும் வயன்மதுவாற் சேறுமாறாப்
பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட கரைமிசைப்போய் புகலிவேந்தர்
நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிர மம்பணிய நண்ணும் போதில்[1]

மாடுவி ரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்
சூடுப் ரப்பிய பண்ணைவ ரம்புசு ரும்பேற
ஈடுபெ ருக்கிய போர்களின் மேகமி ளைத்தேற
நீடுவ ளத்தது மேன்மழ நாடெனு நீர்நாடு[2]

பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகண் மேலோடும்
வெங்கதிர் தங்கவி ளங்கிய மேன்மழ நன்னாடாம் அங்கது மண்ணில ருங்கிய மாகவ தற்கேயோர் மங்கல மாயது மங்கல மாகிய வாழ்மூதூர்.[3]

என்னும் பாடல்களால் சோழநாட்டின்கண் மழநாடென்றதோர் உண்ணாடுள்ளமை நன்கு தெளியப்பெறும். சிவனடியார் அறுபத்துமூவருள் ஒருவராய ஆனாயநாயனார் அவதரித்த திருப்பதியாகிய திருமங்கலமும் திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடப்பெற்ற திருப்பாச்சிலாச்சிரமும் இம்மழநாட்டின்கண் உள்ளமை மேலேகாட்டியுள்ள பாடல்களால் இனிதுணரப் படும். அன்றியும் அன்பிலாலந்துறை. திருமாந்துறை, திருப்பழுவூர், திருமழபாடி, திருவிசயமங்கை[4] முதலிய பாடல்பெற்ற திருப்பதிகள் இந்நாட்டின் கண்ணுள்ளன வேயாகும், ஆகவே, இம்மழநாடு கொள்ளிடத்தின் வடகரையைச் சார்ந்ததாய், ஐயன்வாய்க்கால் பெருவளவாய்க்கால் முதலிய கால்வாய்களாற் பாயப்பெற்றுத் திருச்சிராப்பள்ளி சில்லாவில் கீழ்மேல் பலகாத தூரம் நீண்டு கிடந்ததொரு நாடாதல் வேண்டும். இஃது ஆசிரியர் சேக்கிழார்காலத்தில் சோழநாட்டின் உள்நாடுகளில்


  1. பெரியபுராணம் திருஞானசம்பந்தநாயனார் புராணம் 310.
  2. மேற்படி ஆனாயநாயனார் புராணம். 1, 7.
  3. மேற்படி ஆனாயநாயனார் புராணம். 1, 7.
  4. இத்திருப்பதி இப்போது “கோவிந்தபுத்தூர்” என்ற பெயருடன் கொள்ளிடத்தின் வட கரையில் திருப்புறம்பயத்திற்கு வடமேற்கில் இரண்டுமைல் தூரத்தில் இருக்கிறது.