உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


9. சம்புவராய மன்னர்

வடக்கில் திருமால் எழுந்தருளியுள்ள வேங்கட மலையையும் தெற்கில் குமரிமுனையையும் கிழக்கிலும் மேற்கிலும் இருபெருங் கடல்களையும் எல்லையாகவுடைய இந்நிலப்பரப்பு முற்காலத்தே தமிழகம் என்னும் பெயரினை யுடையதாக இருந்தது. இத்தமிழகம் சேரமண்டலம், சோழமண்டலம், பாண்டி மண்டலம் என்னும் மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுச் சேர சோழ பாண்டியர் என்னும் தமிழ் மூவேந்தர்களால் ஆளப் பெற்று வந்தது. இற்றைக்கு ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகட்கு முன்னர், சோழ மண்டலத்தின் வடபகுதி ஒருதனி மண்டல மாகப் பிரிக்கப்பட்டு தொண்டை மண்டலம் என்னும் பெய ரெய்தியது. இத்தொண்டை மண்டலத்தை அந்நாளில் அரசாண்டவர்கள் தொண்டைமான் மரபினர் ஆவர். இவர்கள் சோழரின் வழியினர்: இவர்கள் தம் குடி முதல்வராகிய சோழரைப் போல் ஆத்தி மாலையை அடையாளமாலையாகக் கொள்ளாமல் ஒரு காரணம் பற்றித் தொண்டை மாலையைத் தம் அடையாள மாலையாகக் கொண்டமையின் 'தொண்டைமான்கள்' என்று அழைக்கப் பெற்றனர். இவ்வேந்தர்களுள் முதல்வன் தொண்டைமான் இளந்திரையன் என்பவன்: இவன் காவிரிப்பூம் பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆட்சிபுரிந்த சோழன் கரிகாற் பெருவளத்தானது பெயரன்; சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனது மகன்; கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் பெருமானால் பாடப்பெற்ற ‘பெரும் பாணாற்றுப் படை' என்னும் பிரபந்தங்கொண்டவன்; செந்தமிழ்ப் புலமையிற் சிறந்தவன்: திருமால் பக்தியில் ஒப்பற்றவன்; இவனும் இவனது வழித்தோன்றல்களும் காஞ்சிமா நகரைத் தலைநகராகக் கொண்டு தொண்டைமண்டலத்தை ஆட்சி புரிந்து வந்தனர். இவர்கள், மக்களாகப் பிறந்தோர் இவ்வுலகில் அடையக்கூடிய உயர்நிலைக்கு எல்லையாகத் ‘தோட்டிமுதல் தொண்டைமான்