உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58




10.அறந்தாங்கி அரசு

நம் தமிழகம் முற்காலத்தில் சேர சோழ பாண்டியராகிய மூன்று தமிழ் வேந்தராலும் அரசாளப்பெற்று வந்தது என்பதை யாவரும் அறிவர். இதனை, 'வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு' என்னும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூற்றினாலும் இனிது உணரலாம். அப்பெரு வேந்தர்களைப் 'போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெரும் தானையர்' என்று பிறிதோரிடத்து அவ்வாசிரியர் பாராட்டியுள்ளனர். இதனை நோக்குமிடத்து, நம் தமிழகத்திற்கும் சேர சோழ பாண்டியர்க்கும் ஏற்பட்டிருந்த தொடர்பு மிகத் தொன்மை வாய்ந்தது என்பது தெள்ளிதின் விளங்கும்.

மூவேந்தரது ஆட்சிக்குப்பட்டிருந்த இந்நிலப்பரப்பில் சில குறுநில மன்னரும் அந்நாளில் இருந்தனர் என்பது சங்க நூல்களால் அறியப்படுகின்றது. ஆசிரியர் தொல்காப்பியனார் இவர்களை, 'மன்பெறு மரபின் ஏனோர்' எனவும் குறித்துள்ளனர் இன்னோர், முடியுடை வேந்தர் மூவர்க்கும் உற்றுழி உதவிவந்தவர்கள்: அவர்களைப் போல் 'வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் ஆரமும் தேரும் வாளும்' உடையவர்கள்.

கடைச்சங்க நாளில் இக்குறுநில மன்னர்கள் வேளிர் என்று வழங்கப்பெற்றனர். பறம்பு நாடு, மிழலைக் கூற்றம், முத்தூர்க் கூற்றம், பொதியில் நாடு, ஆவிநன்குடி முதலியவற்றில் வாழ்ந்த குறுநில மன்னர் முற்காலத்தில் வேளிர் என்று வழங்கப் பெற்றமை, அகநானூறு புறநானூறு முதலான சங்க நூல்களால் அறியக்கிடக்கின்றது. இவர்கள் வேள் எனவும், அரசு எனவும், அரையர் எனவும், அந்நாளில் வழங்கப் பெற்று வந்தனர் என்பது பல கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. 'மண்டல மாக்களுந் தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும். அழுந்தூரும் நாங்கூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும்,