உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசு எனவும் உரிமை யெய்தினோர்.[1] என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியிருத்தலும் இதனை வலியுறுத்தல் காண்க. வழுத்தூர் அரசு, சூரைக்குடி அரசு, அறந்தாங்கி அரசு, சேந்தமங்கலத்தரசு, புல்வய லரசு என்போர் நம் தமிழகத்தில் முற்காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னர் ஆவர். இவர்களுள் அறந்தாங்கி அரசு என்று பெருமையுடன் முன்னர் வாழ்ந்துவந்த குறுநில மன்னர் வரலாறே ஈண்டு ஆராயப்படுவதாகும்.

தஞ்சாவூர் சில்லாவில் அறந்தாங்கி என்ற நகரம் ஒன்றுள்ளது. மாயூரத்திலிருந்து தெற்கே செல்லும் இருப்புப்பாதை இப்பொழுது இவ்வறந்தாங்கி நகரத்தில்தான் முடிவுறுகின்றது. இந்நகரைச் சூழ்ந்து பெரிய மதிலும் அகழியும் அழிவுற்றுக் கிடத்தலை இன்றுங்காணலாம். இஃது ஒரு காலத்தில் அரசர் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய திருவுடை நகராயிருந்திருத்தல் வேண்டும் என்பதை இவை நன்கு புலப்படுத்துகின்றன. இந்நகரிலிருந்து முன்னாளில் ஆட்சிபுரிந்தவர்களே அறந்தாங்கி அரசு என்ற பெயருடன் நிலவிய குறுநில மன்னர்கள். இவர்கள் தொண்டைமான் என்ற பட்டமுடையோர்; பல்லவர் மரபினர்; ஆளுடையார் கோயில் என்று இந்நாளில் வழங்கப்பெறுவதும், மணிவாசகப் பெருமானுக்குச் சிவபெருமான் செந்நெறி அறிவுறுத்தியதும் ஆகிய திருப்பெருந்துறையில் பெரிதும் ஈடுபாடுடையோர்; அங்கு எழுந்தருளியுள்ள இறைவனையே தம்குல தெய்வமாகக் கொண்டு வழிபட்டுவந்தோர், இச்செய்திகளுள் சிலவற்றைக் "காஞ்சிபுர வராதீசுவரன் ஆளுடைய தம்பிரானார்சீபாத பக்தன்" என்று இன்னோரது கல்வெட்டுக்கள் கூறுவதால் அறியலாம். அன்றியும், இவர்கள் திருப்பெருந்துறையில் பல அரிய திருப்பணிகள் புரிந்து நாள் வழிபாட்டிற்கும் பிறவற்றிற்கும் விட்டுள்ள நிபந்தங்களாலும் தனை உணரலாம்.

கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு முடிய நம் தமிழகத்தின் பெரும் பகுதி பல்லவர் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பது வரலாற்று ஆராய்ச்சியால்


  1. தொல் பொருள் அகத்திணையியல் 30 - ஆம் சூத்திரம் உரை.