பக்கம்:துங்கபத்திரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

'ஜாம்பவதி பரிணயம்' என்னும் நாடகத்தைப் புகழ் பெற்ற பம்பாவதி ஆலயச் சன்னதிக்கு எதிரே அரங்கேற்றுவதற்கான சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பொழுது புலர்ந்தால் மேளம் கொட்ட இருக்கும் திருமண வீட்டைப் போல், அரை குறையாக இதழ் விரித்து அருணோதயத்தை எதிர்நோக்கி இருக்கும் அல்லிக் குளத்தைப்போல், தலைநகரம் அலங்காரத்துடன் தோன்றியது. தெருவெல்லாம் தோரணங்கள்! வீடெல்லாம் கோலங்கள்; ஆலயங்களில் சிறப்பான ஆராதனைகள்! பிரஜைகளின் புன்முறுவலுக்குத் தொண்டு புரியும் மன்னருக்குப் 'பெரும் புலவன்' என்ற பட்டத்தை தரப்போகும் விழா அல்லவா அது! 'அந்தப்புரத்து மந்த காசத்தில் துளைத்தபடியே, 'ஆறுகால பூஜை நடைபெறுகிறதா? அறுசுவை உண்டி கிடைக்கிறதா?' என்று கேட்கும் சுகவாசி அல்ல எம் மன்னர்! அவர் வீரர்; விவேகி; கண்டதை, கேட்டதை, வென்றதை, கவியாகப்பாடி இலக்கியமாக வடிக்கும் பேராற்றலும் பெற்றவர் என்று விஜய நகர் மாந்தர் அனைவரும் உவகை பூத்துக் கிடந்தனர்.

***

கோயில், கோடான கோடி விளக்கலங்காரத்தோடு திகழ்ந்தது. அரண்மனை வாசலிலிருந்து புறப்பட்டு ஆலயத்து ராஜகோபுரத்தைத் தொடும் நெடும்பாதை வழியாகத் திரண்டிருந்த மக்களின் பேராரவாரத்தோடு மன்னர் கோயிலுக்குள் நுழைந்தார். அவருக்குப் பின்னால் அவருடைய நாடக இலக்கியம் ஒளிவிடும் முத்துப் பல்லக்கில் எடுத்து வரப்பட்டது. ராயர் பட்டத்திற்கு வந்தபின், அப்போதுதான், இரண்டாவது முறையாக பம்பாவதி ஆலயத்திற்கு வந்திருந்தார். அவருக்கு முடிசூட்டு விழா நடந்தபோது ஒரு முறை ஆலயத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது அவருடைய முடிசூட்டு விழாவின் நினைவாக விஜயநகர சாம்ராஜ்ய அமைப்பாளர்களான ஹரிஹரர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/14&oldid=1507249" இலிருந்து மீள்விக்கப்பட்டது