பக்கம்:துங்கபத்திரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

"ருக்மாங்கதா, அரண்மனையில் நெடுநாட்களாக இந்தச் சதி நடந்து வந்திருக்க வேண்டும்! இல்லாவிட்டால் நாகமர் போன அன்றே இந்தக் கொலை நடந்திருக்குமா? நாகமர் என்றைக்குப் போவார் என்று எதிர்பார்த்தே இந்தக் கொலைகாரன் பண்டிதமணியைக் கொன்றிருக்க வேண்டும். கோழைப் பிறவி! இப்போது அவன் என்முன் வந்தால், அவன் மூளையைச் சிதறடித்துவிடுவேன்!" என்று வீரியம் பேசினான் ஒரு காவலன். அந்த நேரத்தில் மன்னர் துயில் கொண்டிருந்த சித்திரச்சாலைப் பக்கமாகச் செருப்புச் சத்தம் கேட்டது. காவலர் மூவரும் வெவ்வேறு திசைப் பக்கமாகப் பிரிந்து ஓசையைக் கவனித்தார்கள். அந்தக் காலடி ஓசை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது. காவலன் ருக்மாங்கதன் மட்டும் ஓசையைப் பின் தொடர்ந்து அரண்மனைக்குள் நடந்து கொண்டே இருந்தான். கறுப்பு உடை உடுத்திய ஒரு குட்டையான உருவம் இடுப்பில் கத்தியோடு மன்னர் தூங்கும் சித்திரச் சாலைக்குள் அப்போதுதான் அடியெடுத்து வைத்தது. ருக்மாங்கதன் இதைப் பார்த்துவிட்டான். அந்தக் குட்டையான உருவம் மன்னருக்குச் சற்றுத் தொலைவில் ஒரு தாழ்வான கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த விசுவநாத நாயக்கனின் அருகில் போய், "வீராதி வீரனே உன் தந்தை நாகமனின் வீரத்தி லும் செல்வாக்கிலும் நம்பிக்கை வைத்து உன் எதிர்காலத் தைப்பற்றி இன்பமான கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? பரிதாபத்திற்குரிய வாலிபனே, உன்னுடைய மனக் கோட்டை மட்டுமல்ல, விஜயநகரப் பேரரசின் கோட்டையே இன்று எரிந்து சாம்பலாகப் போகிறது!" என்று மெல்லப் பேசியது ருக்மாங்கதன் காதில் அரையும் குறையுமாக விழுந்தது. பண்டித மணியைக் கொன்ற அதே கொலைகாரன்தான் ராயரையும் கொல்ல வந்திருக்கிறான் என்று ருக்மாங்கதன் முடிவு கட்டிவிட்டான். அவனுக்கு மனம் நிலை கொள்ளவில்லை. அவன் விஜயநகர சாம்ராஜ்ஜி யத்திற்கும் மகமதியப் படைக்கும் நடைபெற்ற பெரும் போர்களில் உயிரை விட்டுப் போர் புரிந்து அழியாத் தழும்புகளைப் பெற்றவன். அதற்கும் மேலாக அவனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/22&oldid=1507349" இலிருந்து மீள்விக்கப்பட்டது