பக்கம்:துங்கபத்திரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

எண்ணம் இந்த அய்யருக்குத் தோன்றும். சதிகாரர்களுக்குச் சரியான தண்டனை இதுதான்" என்றார்.

சபை இதை ஏற்றது; சக்கரவர்த்தியும் ஆக்ஞை பிறப்பித்து விட்டார்.

வண்ண மயிலின் தோகை போன்ற வசீகர முதுகுத் திரை தரையில் தவழ, ராயர் எழுந்து நடந்தார்.

அரியநாதனும் விசுவநாதனும் அவரைப் பின் தொடர்ந்தனர்.

3

ரண்மனையைச் சுற்றிய அரசர் வீதியில் ஒரு கருங்கல் மாளிகை. நடந்து முடிந்த நாடக அரங்கைப்போல் அந்த மாளிகை வெறுங் கூடாக இருந்தது. உள்ளே ஒரு பெண்— முதுமையைத் தொடும் வயதினள்; விரிந்த மார்புடைய ஒரு புஜபல பராக்கிரமசாலியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவள் அணியும் மஞ்சளும், குங்குமமும் நிலைக்க வேண்டிய ஆசை அவளுடைய ஏக்கத்தில் ஒளிந்து கொண்டிருந்தாலும், அதையெல்லாம் மிதித்துத் துவைத்துவிட்டு வேறொரு சபலம் பீறிட்டுக் கிளம்பி நின்றது. தந்தையைப் போல் மகன் புகழ்பெற வேண்டும்; வீரன் என்ற பட்டத்தைப் பெற்று அரசரின் அன்பைப் பெறவேண்டும். என்பதே அந்தப் பெண்மணியின் தணியாத ஆசையாக இருந்தது. அவள், இதை அந்த உருவப்படத்தின் எதிரே நின்று, வேண்டுகோளாகக் கேட்டுக் கொண்டு நின்றாள். அப்போது விசுவநாத நாயக்கன் உள்ளே நுழைந்தான். அவனது முகத்தில்தான் என்ன கவர்ச்சி; என்ன உற்சாகம்!

"அம்மா, முதல் வெற்றி எனக்குத்தான்! பிறகுதான் அப்பாவுக்கு" என்று கூவினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/32&oldid=1507503" இலிருந்து மீள்விக்கப்பட்டது