பக்கம்:துங்கபத்திரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

காட்டக்கூடாது. மன்னரின் அன்பைப் பெற்றவன். மற்றவர்களின் பொறாமைக்கு ஆளாவது அரண்மனை மரபு. எந்த உட்பகைக்கும் கட்டுப்படாமல் இருக்க வேண்டும். இன்று நீ எவ்வளவு பரவசப்படுகிறாயோ அந்த அளவுக்கு ஆயிரமாயிரம் கண்கள் உன்னுடைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தொடங்கிவிடும் என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உன் தந்தை மகாமண்டலேசுவரர் எனக்கு உற்ற நண்பர். மற்றவர்களிடம் சொல்லாததை யெல்லாம் என்னிடம் சொல்லுவார். கொற்றவன் குடும்பத்து ரகசியங்களைக்கூட நாங்கள் விடிய விடியப் பேசிக்கொள்வோம். வருங்காலத்தில் உன்புகழ் அவர் புகழை உறுதிப்படுத்த வேண்டும்; உன் கீர்த்தியில் தான் அவருடைய கிழப்பருவம் அமைதிபெற முடியும். உலகில் எந்த ரகசியமும், யாருக்கும் தெரியாமல் நெடுநாள் வாழ்ந்ததில்லை. ஆகையால், எந்தக் காரியத்தையும் ரகசியமாகச் செய்துவிடலாம் என்று எண்ணி விடக்கூடாது"— துர்ஜதியாரின் இந்த அறிவுரையைக் கேட்டுக்கொண்டே நின்ற விசுவநாதனுக்கு இடை மறுத்து ஏதாவது பேசவேண்டும் போல் தோன்றியது.

"மனமறிந்து பிழை செய்ய மாட்டேன். குடும்பத்தின் தரமறிந்து நடக்க முயல்கிறேன்." — ஆலயத்து மூலவிக்ரகத்திற்கு முன்னின்று வரம் கேட்கும் பக்தனைப்போல் விசுவநாதன் பதில் சொன்னான்.

புலவர் சிரித்தார். அந்தச் சிரிப்பில் வினயம் இருந்தது. பால்ய காலத்துக் குறும்பு இருந்தது. "நீ அஞ்சுவதற்கு இடமில்லை. நம் மன்னர் பிழை பொறுப்பார்; மன்னிப்பார். ஆனால் தொடர்ந்து பிழை செய்தால் யார் தடுத்தாலும் விடமாட்டார். விசுவநாதா? இதுவரை செய்ததை மறந்துவிடு! புதுப் பிழை புரியாதே!" என்று விகடத்தோடு பொடி வைத்துப் பேசினார் துர்ஜதியார். இருபொருளில் பேசுவதில் இணையற்றவர் என்று மன்னரிடம் பதக்கம் பெற்றவரல்லவா அவர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/35&oldid=1507509" இலிருந்து மீள்விக்கப்பட்டது