பக்கம்:துங்கபத்திரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

மணக்கும்; திராட்சை பழங்கள் உதிர்ந்து விழும். அன்று இந்த அறிகுறிகள் எதையும் காணோம்.

கிழக்கு வெளுக்கப் போவதை உணர்த்த மேகத் திட்டுக்களில் சாம்பல் பூக்கத் தொடங்கியது. அலுத்துச் சலித்துப் போன விசுவநாதன் சாளரத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று அந்தப்புரத்தின் ஒரு மூலையிலிருந்த மனோரஞ்சிதப் பந்தல் ஆடியது. விசுவநாதன் முகத்தை மூடிக்கொண்டு பன்னீர்மரத்தின் மறைவில் ஒதுங்கிக்கொண்டான். மனோரஞ்சிதப் பந்தல் மறுபடியும் அசைந்தது. கோபத்திற்காளான சந்நியாசியின் சாபத்திற்குள்ளான அபலைப் பெண்களைப்போல் மற்ற செடிகள் எதுவும் ஆடவில்லை; அசையவில்லை; கல்லாய்ச் சமைந்து நின்றன.

விசுவநாதனுக்கு மனம் குழம்பியது. தன்னைப் போல் இன்னொருவன் யாரோ அந்தப்புரத்தில் ரகசிய நாடகம் நடத்தி வருவதாக அவள் நினைத்தான். அது பொய்யல்ல என்பதை அடுத்த கணம் அவன் கண்ட காட்சி உறுதிப் படுத்தியது. இளவரசனைப் போன்ற ஒரு ஆடவனைத் தொடர்ந்து ஒரு பெண்–இருவருமாக மனோரஞ்சிதப் பந்தலுக்குள்ளிருந்து வெளியே வந்தார்கள்; முகம் தெரியவில்லை. ஆடவனின் நடை மட்டும் பார்த்தது, பழக்கப்பட்டது. துரத்திப் பிடித்துவிட முடியும். துணிவில்லை. திருடனைத் திருடன் பிடிப்பதா? விசுவநாதன் திகைத்துப் போனான். இனிமேல் அந்தப்புரத்தில் துங்கபத்திரையை சந்தித்துப் பேச முடியும் என்ற நம்பிக்கையை அவன் இழந்துவிட்டான். ஆனால் இளவரசி ஏமாற்றிவிட்டாள் என்று அவள் மீது அவன் கோபப்பட வில்லை. மனோரஞ்சிதப் பந்தலுக்குள்ளிருந்து வந்த காதலர்களைப் பார்த்துவிட்டுத் தான் வெளிவராமல் இருந்துவிட்டாள் என்று விசுவநாதன் திடமாக நம்பினான்.

***

"என் கண்களையே நம்ப முடியவில்லை! எதிர்காலத்தை எண்ணிப் பார்க்காமல் இப்படி நடப்பான் என்று நான் நினைக்கவே இல்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/49&oldid=1507886" இலிருந்து மீள்விக்கப்பட்டது