பக்கம்:துங்கபத்திரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

"நெருப்பில்லாமலா புகை கிளம்பும்! எங்காவது காதல் இறுதிவரை ரகசியமாக இருந்ததுண்டா? ரகசியம் தெரியும் வரை காதல் உலகத்தை ஏமாற்றுகிறது. தெரிந்த பிறகு உலகம் காதலைக் கொன்றேவிடுகிறது."

"தயவுசெய்து நீங்கள் வெளியில் சொல்லக்கூடாது. நமக்குத் தெரிந்ததோடு இருக்கட்டும். விசுவநாதன் இதை இனிமேல் என்னிடம் மூடிமறைக்க முடியாது. நேரம் வரும் போது அவனைக் கண்டிக்கத் தவற மாட்டேன்."

"நன்மைக்காகத்தான் இதை நான் உன்னிடம் தெரிவித்தேன். நீ இல்லாவிட்டால் நான் மன்னரின் காதிலேயே போட்டிருப்பேன். நம்மைப் போல் அவர் பார்த்திருந்தால் அந்த இடத்திலேயே விசுவநாதனின் தலையைக் கொய்திருப்பார். விஜயநகர் வரலாற்றுக்கு ஒரு மாபெரும் இழுக்கு ஏற்பட்டிருக்கும். நீ எப்படியும் விசுவநாதளின் மனத்தை மாற்றி விடவேண்டும். நீ நினைத்தால்தான் முடியும். அவன் ரகசியம் உனக்குத் தெரிந்துவிட்டது. இனி அவன் உன்னிடம் கடன் பட்டவனைப்போல் நடந்து கொள்வான்; பயப்படுவான்."

"தவறு! நாங்கள் ஒருவருக்கு ஒருவர் அந்நியரல்ல. அவனுடைய பலவீனம் ஒன்று எனக்குத் தெரிந்து விட்டால், என்னுடைய பலவீனம் ஒன்றை நானாக அவனிடம் தெரிவித்து விடுவேன். இந்த முறையை நாங்கள் பின்பற்றாவிட்டால் எப்போதோ ஒருவர்க்கொருவர் எதிரியாகி இருப்போம்; கொலைகூட நடந்திருக்கும்."

"என்னமோ, அரசாங்கத்திற்கு நான் காட்ட வேண்டிய விசுவாசத்தைக் காட்டிவிட்டேன். துரோகம் என்னுடைய பரம்பரைக்கே இல்லை. நான் போய் வரட்டுமா?"

"இப்படியேவா போகிறேன் என்கிறீர்கள்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/50&oldid=1507887" இலிருந்து மீள்விக்கப்பட்டது