பக்கம்:துங்கபத்திரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

கங்கா வந்தாள். மங்கா ஒளியுள்ள அவள் விழிகள் தெளிந்த நீருக்குள் அலையும் மீன்களைப் போல் விளையாடின்.

"கங்கா தளபதியை வணங்கு! இவர்தான் விஜய நகரத்தின் எதிர்கால மண்டலேசுவரர்! நினைவில் வைத்துக் கொள். உனக்கு ஞாபக மறதி அதிகம்." – துர்ஜதியின் அறிமுகத்தில் வினயம் இருந்தது.

"மன்னிக்க வேண்டும். தங்களுக்கு மகப் பேறே இல்லையென்று எண்ணியிருந்தேன். கங்கா... கங்கா...!" சுவை கூட்டி அடிக்கடி சொல்லிப் பார்த்தான் சிங்கராயன்.

"ஆம்! கங்காதாள் அவள் பெயர். தென்னாட்டில் நதியின் பெயரைப் பெண்களுக்கு வைப்பது மரபு. அதுவுமல்ல, குளிர்ச்சியையும் இன்பத்தையும் எது எது மக்களுக்குத் தருகிறதோ, அதன் பெயர்களையெல்லாம் பெண்களுக்கு வைப்பார்கள். மல்லிகைப்பூ, மகிழம்பூ, மனோரஞ்சிதம் என்று பெண்களுக்குப் பெயர் வைப்பதும் இதனால்தான். பூக்களில் குளிர்ச்சியுண்டு, இனிமையுண்டு! கவிஞர்கள் நிலவைப் பெண்ணாக வர்ணிப்பதும் இதற்காகத்தான்!"– துர்ஜதியின் இந்தப் பெயர் ஆராய்ச்சியை சிங்கராயன் கவனிக்கவில்லை. அவன் ஒரு புது ஆராய்ச்சியில் திளைத்திருந்தாள்.

"புலவரே, நிலவில் மலர் பூப்பதுண்டா?" என்று கேட்டான்.

"இதென்ன கேள்வி! நிலவில்தானே பூக்கள் மலர்கின்றன!"

"தவறாகப் புரிந்து கொண்டீர்கள். நிலவின் முகத்தில் மலர் பூப்பதுண்டா என்று கேட்டேன்" என்றான் சிங்கராயன்.

புலவர் சிரித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/55&oldid=1507892" இலிருந்து மீள்விக்கப்பட்டது