பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தும்பைப் பூ

களுக்கு இடையிடையே பெரிய படகுகளும் மிதந்து வந்து கொண்டிருந்தன. பெரிய மீன்களைப் பிடிக்கும் ஆற்றல் வாய்ந்த பெரிய வலைஞர் பலர் அவற்றில் காணப்பட்டனர். இவ்விதம் படகுகளிலும் கட்டுமரங்களிலும் வரும் பரதவர்களை எதிர்பார்த்து, பரதவப் பெண்கள் பலர் கடற்கரையில் மீன் கூடைகளை இடுப்பில் வைத்தும் கையில் பிடித்தும் நின்றிருந்தனர். அவர்களுடன், சிறாரும் வயது முதிர்ந்தோரும் காணப்பட்டனர். அவர்களிடையே இருந்து கிளம்பிய பேச்சு ஆரவாரம் அலைகளின் ஓசையைக்கூட அடக்கிவிட்டது. இன்னும் சிறிது நேரத்திற்குள் தங்களுக்கு எப்படியும் இரை கிடைக்கக்கூடும் என்ற ஆசையுடன், கருடன்களும், பருந்துகளும் காக்கைகளும் அவ்விடத்தைச் சுற்றிச்சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

கடற்கரையோரத்தில் செம்படவர்களேயன்றி வேறு சிலரும் நடமாடிக் கொண்டிருந்தனர். பெரிய மனிதர்கள் சிலர் கைகளில் ஊன்றுகோலை வைத்துக் கொண்டு அலை புரளும் கரையோரத்திலும், பெரிய பாதையை அடுத்துள்ள நடைபாதையிலும் சூரியனொளியில் மூழ்கியவாறு உலவிக் கொண்டிருந்தனர். எதிர்ப்புறத்திலுள்ள மேரி ராணி கல்லூரியில் வாசிக்கும் மாணவிகள் சிலரும் கடற்கரையில் உல்லாசமாக உலவிக் கொண்டிருந்தனர். இளைஞர்கள் சிலர் கதிரொளி தங்கள் தேகங்களில் பட, மணற்பரப்பில் உடற்பயிற்சி செய்துகொண்டும் ஓட்டப்பந்தயத்துக்குப் பழக்கம் செய்துகொண்டும் இருந்தனர். நடுப்பாதையில் மோட்டார் கார்கள் இப்படியும் அப்படியுமாக ஓடிக்கொண்டிருந்தன.

ஜட்கா வண்டியொன்று தெற்குநோக்கி வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. சில நிமிடங்களுக்கு ஒரு தரம் சாட்டையைச் சொடுக்கியும் ‘ஏய்’ ‘ஊய்’, எனக் குரல் கொடுத்துக்கொண்டும், ஜட்கா வண்டி சாயபு சாதுர்யமாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்தான். ‘டக்ا டக்’ என்று அடியெடுத்து வைத்து லாகவமாக ஓடிக்கொண்டிருந்த குதிரையின் குளம்பு ஓசை கேட்பதற்கு இனிமையாக இருந்