பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

115


"501" என்று வாய் குழறச் சொன்னான்.

பிள்ளையவர்கள், "501 ஆ?" என்று கேட்டவாறே பரீட்சை 'ரிஸல்ட்' பிரசுரிக்கப் பட்டிருந்த பக்கத்தைத் திருப்பிப் பார்த்து, "அந்த நெம்பர் இல்லை போலிருக்கிறதே! அப்போதிலிருந்து தேடித் தேடிப் பார்க்கிறேன். ஒரு வேளை என் கண்களுக்குத்தான் தெரியவில்லையோ? நீ பார் இருக்கிறதா என்று?" எனச் சொல்லித் தாம் வைத்திருந்த தினசரியை மகனிடம் நீட்டினார்.

சிவகுமாரன் நடுங்கிய கையால் அப்பத்திரிகையை வாங்கினான். ஆனாலும், அவன் அதைப் பார்க்கத் தயங்கினான். ஏனென்றால் அவன் ஏற்கனவே தன் பரீட்சை 'ரிஸல்டை'ப் பற்றிக் கேட்டுத் தெரிந்து வைத்திருந்தாள், ஆனால், அதை அவன் தந்தையிடம் எப்படிச் சொல்வது என அஞ்சியிருந் தான். இப்போதோ சொல்லியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. இதனிடையே அவன் மனதில் ஒரு சபலம் உண்டாயிற்று, ஒரு வேளை சர்க்கார் கெஜட்டில் தன் பாட்சை நெம்பர் வந்திருந்தால், இப் பத்திரிகையிலும் வெளியாயிருக்குமல்லவா? என்று, "கடவுளே! நான் 'பாஸ்' செய்ததாக நெம்பர் வந்திருக்கக்கூடாதா? நான் விசாரித் தறிந்தது பொய்யாகி விடலாகாதா?" என்று அவன் மனம் பிரார்த்தித்தது. அந்தச் சஞ்சல நெஞ்சத்தோடு அவன் பத்திரிகையில் வெளியாகியுள்ள பரீட்சை நெம்பர்களை ஊடுருவிப் பார்க்கலானான். அவன் பாஸ் செய்திருந்தால் தானே அவனுடைய பரீட்சை நெம்பர் வந்திருக்கும்? பல முறை பார்த்தால் வராதது வந்து விடுமா, என்ன? ஆனாலும் அவன் பஞ்சத்தில் அடிபட்ட ஒருவன் படியால் அரிசியைப் பலதடவை அளந்து குறுணி பதக்காகாதா என்று பார்ப்பது போலே, பரீட்சை 'ரிஸல்ட்' அச்சாகியுள்ள பத்தியைத் துழாவித் துழாவிப் பார்த்தான்.

"என்னடா, சும்மா பார்க்கிறாய்? உன் நெம்பர் இல்லையில்லையா?"

சதானந்தம் பிள்ளை பொறுமையை இழந்து கேட்டார்.