பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

தும்பைப்பூ


பார்க்கலானார், கடைசியாக அவர் உதட்டைப் பிதுக்கிவிட்டுத் தலை நிமிர்ந்து அறைக்கு வெளியே கண்ணை ஒட்டி, "சிவா! ஏ! சிவா!" என்று கூப்பிட்டார்.

"பெரியண்ணாவையா கூப்பிடனும், அப்பா?" என்று கேட்டுக் கொண்டே கோகிலா அங்கு வந்தாள்.

"ஆமாம், அம்மா! அவன் இல்லையா?" சதானந்தம் பிள்ளை கோகிலாவைக் கேட்டார்.

"இதோ கூட்டி வருகிறேன். அப்பா! அண்ணா இப்போது தான் குளித்து விட்டு அறைக்குள் போச்சு."

"மெல்ல வரட்டும். அவசர மொன்றுமில்லை" என்று அவர் மெதுவாகச் சொல்லிவிட்டுப் பத்திரிகையில் மீண்டும் கண்களைப் பதித்தார்.

கோகிலா உள்ளே போன சிறிது நேரத்துக்கெல்லாம், சிவகுமாரன் பிள்ளையவர்கஸ் இருக்குமிடம் வந்தான். தந்தையார் காலைப் பத்திரிகையைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதுமே அவன் மனம் குழம்பியது. அவனுடைய உடம்பில் பதற்றம் காணப்பட்டது. தான் வந்திருப்பதைத் தெரிவிக்கக் கூட அவன் அஞ்சி நின்றான்.

தலையங்கப் பகுதியுள்ள பக்கத்தைப் புரட்டிவிட்டு மறு பக்கத்தைப் பார்க்க முயன்ற சமயத்தில், சிவகுமாரன் வந்து நின்றிருப்பதைத் தற்செயலாகக் கண்டுவிட்ட பிள்ளையவர்கள், "ஆமாம்; சிவா, உன் பரீட்சை நெம்பர் என்ன ?......." என்று கேட்டார்.

இவ்வினா சிவகுமாரனைக் கிடுகிடுக்க வைத்தது. அவன் முகம் அச்சத்தால் கருத்தது. தந்தை கூப்பிடுகிறார் என்ற போதே பரீட்சை 'ரிசல்ட்' பற்றி விசாரிக்கத்தான் அழைக்கிறார் என ஊகித்து அதற்கு என்ன பதில் சொல்வது என்று நடுங்கிய சிவன் இப்போது இன்னும் அதிகமாக விதிர் விதிர்ப்புக் கொண்டான்.