பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தும்பைப் பூ

நினைந்து சோகமே உருவாக ரயிலில் பிரயாணஞ் செய்து வந்த மங்கையர்க்கரசி, எழும்பூர் ஸ்டேஷனில் இறங்கியதுமே நகர வாடை தாங்காமல் நடுக்கமுற்றாள். எங்கு பார்த்தாலும் மக்கள் கடல் போல் திரண்டு அலைமோதிக் கொண்டு இருப்பதைக் கண்டு அவள் மலைப்படைந்தாள். ரயிலிலிருந்து இறங்கியவர்களில் பலரை அவர்களுடைய உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்து வரவேற்று அழைத்துச் செல்வதைப் பார்த்தபோது, தங்களையும் அழைத்துப் போக யாராயினும் வந்திருப்பார்களா என்று அவள் மனம் எண்ணியது. கண்கள் ஆவலோடு சுற்றுமுற்றும் பார்த்தன. ஆனால், தாங்கள் முன்னறிவிப்பின்றியே ஊரைவிட்டுத் திடீரெனப் புறப்பட்டு வந்தது அவள் ஞாபகத்திற்கு வந்ததும் ஏமாற்றத்தைச் சமாளித்துக் கொண்டு தாயுடன் வந்தாள். இந் நிலையில் தங்களைச் சூழ்ந்து கொண்டு, “பெட்டி படுக்கை சாமான்கள் இருக்கிறதா? அம்மா! எங்கே இருக்கிறது சொல்லுங்கோ? நாங்க எடுத்து வாரோம்” என்று நச்சரிக்கும் போர்ட்டர்களைக் கண்டு அவளுக்கு எரிச்சல் தான் வந்தது. “இவர்கள் ஏன் இப்படி பேய்கள் போல் பறக்கிறார்கள்; தொல்லைப்படுத்துகிறார்கள், பிரயாணிகளைப் போகவிடாமல்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

இதைச் செவியுற்ற சிவகாமியம்மாள், “அவர்கள் வேறென்ன செய்வார்கள்? குழந்தை, வயிற்றுப் பிழைப்பு இருக்கிறதே!” என்று மகளுக்குச் சமாதானம் சொல்லி விட்டு, போர்ட்டர்களைப் பார்த்து, “போங்க ஐயா, எங்களிடம் சாமான்கள் ஒன்றும் கிடையாது; வழி விடுங்கள்”" என்று கூறிக்கொண்டே, தான் கையில் பிடித்திருந்த துணிமூட்டையை எடுத்துக் கக்கத்தில் வைத்துக்கொண்டு ரயில் நிலையத்துக்கு வெளியே போகலானாள்.

“இந்த ஸ்டேஷன் ரொம்ப பெரிசாயிருக்கிறதே, அம்மா! மாயவரம் ஜங்க்ஷன் கூட இவ்வளவு பெரிசா இல்லையே!” என்று மங்கையர்க்கரசி அண்ணாந்து பார்த்துக்கொண்டே கேட்டவாறு தாயுடன் நடந்தாள்.