பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தும்பைப் பூ

13

சிவகாமியம்மாள் புன்னகை செய்தவாறு, “சே! அதெல்லாம் இதற்கு முன்னாலே நிற்குமா? இது பெரிய ஸ்டேஷனில்லையா? தெற்கே இருக்கிற ஸ்டேஷன்களுக்கெல்லாம் இதுதான் தாய் ஸ்டேஷன் என்று சொல்லுகிறார்கள். எந்த ஊருக்கும் போகிற ரயில் வண்டிகளும் இங்கிருந்து தான் புறப்படுகின்றன; வந்து சேருகின்றன. இதற்கு மேலே ரயில் போகாது. நாம் வழியிலே பார்த்தோமே! நாம் வந்த வண்டிக்குப் பக்கத்திலே ஓடி வந்ததே! மின்சார வண்டி என்று நான் சொல்லல்லை! அதுதான் இதற்கப்புறமும் பீச் ஸ்டேஷன் வரைக்கும் போகும். ஆனால் அதற்கு வேறே பாதை. அது தாம்பரத்திலிருந்து கடற்கரை வரைக்கும் போகிறது” என்று விவரித்தாள்.

மங்கையர்க்கரசி நாலா பக்கங்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டே. நிதானமாக நடந்தவாறு, “கட்டிடம் கூடப் பாரிக்க நன்றாக இருக்கிறது” என்று கூறியவள், “சே! இது என்ன? காலில் ஏதோ......?” என்று சொல்லிக் கொண்டே குனிந்து பார்த்தாள். யாரோ காரித் துப்பிய எச்சிலை அவள் மிதித்து விட்டிருந்தாள். “அறிவில்லாதவர்கள் வழியில் அசுத்தம் பண்ணி வைத்திருக்கிறார்களே” என்று முகத்கைச் சுளித்துக் கொண்டு கூறியவாறு, காலை ஒரு பக்கமாகப் போய்த் துடைக்கலானாள்.

“இதெல்லாம் இங்கு சகஜம், மங்கை! அதோ பார்! வாழைப்பழத்தோல், காய்ந்த ரொட்டித் துண்டு எல்லாம் கண்ட இடங்களில் எறியப் பட்டிருக்கின்றன. எங்கு பார்த்தாலும் எச்சிலும் துப்பலுந்தான். ஊர்தான் பட்டணம். நாகரிக நகரம் என்று பேர்...—ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆடை அலங்காரத்தில் குறையிருக்காது. முகத்துக்குப் பவுடர், மேலே வாசனை வீச செண்டு......மற்றதெல்லாம் அப்படியப்படித்தான். நீதான் இங்கு இருக்கப் போகிறாயே! இன்னும் எத்தனை யெத்தனை விதமான வேடிக்கைகளைப் பார்க்கப் போகிறாய், பாரேன்” என்று