பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

121

னா

தம்முடைய மகன் பரீட்சையில் பெயிலாகிவிட்டான் என்பதை, சதானந்தம்பிள்ளை தம் வாயாலேயே சொல்லச் சிறிது சங்கடப்பட்டார். ஆனாலும் கேட்டதற்குப் பதில் சொல்லியாக வேண்டிய நிலையில் இருந்ததை நினைத்து, "நிலைமையைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியவில்லையா? 'ரிஸல்ட்' என்னவிதமாய் இருந்திருக்கும் என்று. நீங்கள் வரும்போது நான் உரத்த குரலில் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தேன் என்றால், அது எதற்காக இருக்கும் என்று தெரிந்துகொள்ள உங்களுக்கு அதிக நேரம் ஆகுமா? இவனுடைய பரீட்சை ரிஸ்ல்ட் இன்று காலைப் பத்திரிகையில்தான் வெளியாகியிருக்கிறது...... " என்று ஒரு தினுசாக மறுமொழி கூறினார்.

மாசிலாமணி முதலியார் நரைத்த புருவங்கள் நெற்றியில் ஏற, அப்படியென்றால் சிவன் பாஸாகவில்லையா?” என்று வியப்போடு வினவி விட்டு, சிவகுமாரன் பக்கந் திரும்பி, "ஏன் சிவா! அப்பா சொல்வது உண்மையா? அல்லது விளையாட்டுக்கு...” என்று கேட்டு நிறுத்தினார்.

சிவகுமாரன் விவரிக்க வொண்ணாத வேதனையோடும், வெட்கத்தோடும் மேலும் தலையைக் குப்புறக் கவிழ்த்துக் கொண்டான்.

விடாக்கண்டரான முதலியார் வெந்த புண்ணில் வேலைச் செருகுவதுபோல் பேசினார். "என்னால் கொஞ்சமும் நம்பவே முடியவில்லையே! சிவன் பாஸ் ஆகவில்லையென்றால், வேறெந்தப் பையனுமே இப்பரீட்சையில் பாஸ் ஆகியிருக்க முடியாது...ஆமாம்..."

திலகவதியும் மங்கையர்க்கரசியும் உள்பக்கத்தில் இருந்தவாறே இவர்களுடைய உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்தச் சமயத்தில் 'இந்த மனுஷன் வந்து தொலைந்தானே! எக்கச்சக்கமாக ஏதாயினும் சொல்லி அத்தானுடைய கோபத்தை அதிகப்படுத்தி விடுவானோ என்னவோ!' என்று மங்கை அஞ்சலானாள்.

து-8