பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

தும்பைப்பூ


"அதனால், என்னை உள்ளே தள்ள ஏற்பாடு செய்து வருகிறார்கள் என்கிறீர்கள்; இல்லையா?"

"நான் மட்டும் சொல்லவில்லை. அவர்கள் அபிப்பிராயமும் அது தான் என்பதை அறிந்தே சொல்லுகிறேன்...எதற்கும் சிவனையும் விசுவத்தையும் கம்யூனிஸ்டுகளின் கூட்டங்களுக்கும் திராவிட கழகத்தினரின் கூட்டங்களுக்கும் போக வேண்டாமென்று சொல்லி வையுங்கள்."

"நான் எப்படிச் சொல்ல முடியும்? தந்தை என்பதற்காக அறிவு வந்த பிள்ளைகளின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது மரியாதையாகுமா? சொன்னால்தான் இந்தக் காலத்துப் பிள்ளைகள் கேட்பார்களா...?"

"சொல்லவேண்டியதைச் சொல்லத்தான் வேண்டும். கண்டிக்க வேண்டியதைக் கண்டிக்கத்தான் வேண்டும். இப்போது பரீட்சையில் தவறி விட்டதற்காக, சிவனை நீங்கள் கடிந்து கொள்ளவில்லையா!..."

சதானந்தம்பிள்ளை யோசனையில் ஆழ்ந்தார்.

மாசிலாமணி முதலியார், "அண்ணா, நான் ஏன் இவ்வளவு தூரம் வற்புறுத்துகிறேன் என்றால், போலீஸ் மந்திரி கோமதி நாதன் உங்கள மடக்குவதற்குமுன், சிவனை புரட்சிக் கொள்கையுள்ள கட்சியில் சேர்ந்திருப்பவன் என்று காரணம் சொல்லிக் கண்ணி வைத்துப் பிடித்து உள்ளே தள்ளச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறான்...முன்னமேயே ஒருமுறை அவனைக் காரணமாக வைத்து உங்கள் வீட்டைச் சோதனை போடத் திட்டம் போட்டான். ஆனால் முதல் அமைச்சர் அதற்கு இடந்தரவில்லை..."

இச்சமயம் 'ஆ!' எனப் பெரும் கூச்சல் உள்ளே இருந்து கேட்கவே, "என்ன இது? என்று கேட்டுக் கொண்டே சதானந்தம் பதறியெழுந்தார். இதற்குள், கோகிலா, அங்கு ஓடி வந்து, "அம்மா. மூர்ச்சை போட்டு விழுந்திட்டாங்க, அப்பா!" என்று பயத்தால் படபடக்கச் சொன்னாள்.