பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

131

 சதானந்தத்தின் உடல் பதறியது. இரண்டு எட்டில் அவர் உள்பக்கம் தாவினார். மாசிலாமணி முதலியாரும் திகைப்புற்றவராய்ப் பின் தொடர்ந்தார்.

இவர்களுக்கு முன் சிவகுமாரனும் விசுவநாதனும் உள்ளே போயிருந்தனர், ஆனால் தாய் காக்கை வலிப்புப் போல் இழுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் திகைத்து நின்றுவிட்டனர். சதானந்தமும் செய்வதறியாமல் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.

திலகவதியைத் தூக்கி மடியில் தாங்கியவாறு ஆஸ்வாசப்படுத்திக் கொண்டிருந்த மங்கையர்க்கரசி அத்தானைப் பார்த்ததும் கதறிவிட்டாள்.

"என்ன? என்ன நேர்ந்தது? ஏன் அக்கா...?" சதானந்தம் வாய் குழறத் தட்டுத் தடுமாறிக் கேட்கலானார்.

மங்கை அக்காவை ஒருமுறை பார்த்துவிட்டு அத்தானை நோக்கி, "நீங்கள் சிவா விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தீர்களல்லவா? அரசாங்கம் என்னமோ உங்கள் மீதும் நடவடிக்கையெடுக்க முயன்று கொண்டிருப்பதாக அண்ணா சொன்னதைக் கேட்டதும் அக்கா பதறிப் போய்ச் சாய்ந்து விட்டார்கள்..." என்று விவரித்தாள்.

அப்போதுதான் தன் மனைவியின் முகத்தைக் குனிந்து கவனித்த சதானந்தம் அவள் முகம் கோணலாக இழுத்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், "அடடா! பகவாதமல்லவா திடீரெனத் தாக்கியிருப்பதாகத் தெரிகிறது?..." என்று அவர் வாய் விளம்பியது.

"எதிர்பாராத தொன்றைக் கேட்ட அதிர்ச்சியால் இப்படி ஏற்பட்டிருக்குமா?..." என்று யோசனையோடு மாசிலாமணி முதலியார் சொன்னார்.

சதானந்தம் சிவகுமாரன் பக்கந் திரும்பி, "சிவா! உடனே போய் நம்ம டாக்டரைக் கையோடு அழைத்து வா" என்று கட்டளையிட்டார்.