பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

தும்பைப் பூ

மனைவியின் இந்த ஆறுதல் மொழி பிள்ளையவர்கள் மனத்தை என்னவோ செய்தது.

திலகவதி கணவனைக் கனிவோடு பார்க்கலானாள். அவருடைய முகத்தில் அந்தச் சில வினாடிகளில் என்னென்ன கண்டாளோ! அவள் கண்களில் நீர் பனித்தது. அவள் உள்ளம் பொருமியது. அவ்விம்மிதத்தையுணர்ந்து கொண்டவர் போல் அவரும் பொருமினார்.

“ஏன் நிற்கிறீர்கள்? இப்படி உட்காருங்கள்” என மிக மெல்லச் சொன்னாள் திலகவதி.

பிள்ளையவர்களுக்கு மனைவியின் பக்கத்தில் அமர்ந்து அவளை ஆஸ்வாசப்படுத்த வேண்டும் என்று ஆவல் அடிக்கடி எழும். ஆனால், மங்கையோ மற்றவர்களோ எப்பொழுதும் உடனிருப்பதால் தூர இருந்தே அவளுடைய காரியங்களைக் கவனிப்பார். இப்போது மனைவியே சொன்னதும், அவர் அவள் பக்கத்தில் போய் அமர்ந்தார். சடை பிடித்துத் தாறுமாறாய் முகத்தின் மீது விழுத்து கிடந்த கூந்தலை அவரது இடது கரம் கோதலாயிற்று. அவரது வலக்கை வற்றியுலர்ந்திருந்த அவள் கன்னத்தை வருடியது.

மீண்டும் கணவனைக் கனிகரமாகப் பார்த்த திலகவதி எப்படியிருந்த தேகம் “எப்படியாய் விட்டது? தளதளப்பெல்லாம் போய் தாடையொட்டியல்லவா போயிருக்கிறது. தோளும் சூம்பிக் கைகளும் சோர்ந்து போய்....” என்று ஆற்றாமையோடு சொல்லி நிறுத்தினாள்.

“பேசிச் சிரமப்படுத்திக் கொள்ளாதே, திலகம் என் உடம்புக்கு என்ன? நீ தான் நலிந்து...... நீ நல்லபடியாக எழுந்து விடு. அப்புறம் பார்; எல்லாம் சரியாகிவிடும்......”

அவள் பிழைக்க மாட்டாள் என்று அவருக்கு நன்கு தெரிந்தும் நப்பாசையால் அவ்விதம் நவின்றார்.

“நல்லபடியாக......” அவள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள், அவள் கண்கள் மட்டும் அவர் கண்களை