பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

143

ஆகவே, சதானந்தம் அவள் அருகேயே இருந்தார். ஒரு கணம் கூட அப்படி இப்படி போவதில்லை, தப்பித் தவறிப் போனலும் மங்கையைக் கூப்பிட்டு இருக்கச் சொல்லிவிட்டுப் போவார்.

காணும் பொங்கலன்று மாலை திலகவதியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாய் விட்டது. இது கண்டு, பிள்ளையவர்களும் மங்கையும் வெலவெலத்துப் போயினர். விழிகள் மேலுங் கீழுமாக உருள்வதையும் மருள மருளப் பார்ப்பதையுங் கண்டு பயந்து கோகிலாவும் கணேசனும் அழலாயினர். அச்சமயம் விசுவநாதன் கூட இல்லை.

இருட்டி விட்டுங்கூட, விளக்கு ஏற்றத் தோன்றவில்லை இருவருக்கும். பேயறைந்தவர்கள் போலப் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தனர். பணிப் பெண் வந்துதான் மின்சார விளக்குகளைப் பொருத்தலானாள்.

விளக்கு ஏற்றப்பட்டதும் திலகவதியின் உயிர் விளக்கும் சிறிது பிரகாசமாய் எரியலாயிற்று. திடீரென அவள் முகத்தில் ஒரு விதக் களை காணப்பட்டது. இப்போது இவள் சிறிது தெளிவாகக்கூட பேச முயன்றாள். வேலை செய்து விட்டு, வீட்டு எசமாணிக்கு இப்படியிருக்கிறதே என்று கருதித் தயங்கி ஒரு புறம் நின்றிருந்த பணிப் பெண்ணை நோக்கி, அவள் வீட்டுக்குப் போய்க் காலையில் வருமாறு மங்கை மூலம் சொன்னாள். பின், அவள் குழந்தைகளை அழைத்துப் போய் பொழுதோடு சாப்பிடச் செய்யுமாறு மங்கைக்குப் பணித்தாள்.

கலக்கத்தோடு நின்றவாறு தன்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கணவனை நோக்கி, நீங்களும் சாப்பிட்டு விட்டு வாருங்களேன்' என்று பரிவோடு மெல்லக் கூறினாள்.

“இருக்கட்டும்” என்றார் பிள்ளையவர்கள் தழுதழுத்த குரலுடன்.

“எனக்கு ஒன்றுமில்லை; நீங்கள் ஏன் வருந்துகிறீர்கள்?”